CM Stalin: ஊழலை பற்றி பேசி பிரதமர் மோடிக்கு தகுதி உண்டா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் பவித்திரமானிக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
15 ரூபாயாவது கொடுத்தீங்களா?
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”கடந்த 9 வருடமாக மத்தியில் மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த 9 வருடத்தில் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா? தேர்தலுக்கு முன்னாள் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய கருப்பு பணங்களை எல்லாம் கைப்பற்றி இந்தியாவிற்கு கொண்டுவந்து நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கொடுக்கப் போறேன் என அறிவித்தார் மோடி. நான் பல கூட்டங்களில் கேட்டேன் 15 லட்சம் வேண்டாம் ஒரு 15 ஆயிரம் மட்டும் அல்து 15 ஆயிரம் கூட வேண்டாம் 15 ரூபாய் கொடுத்தாங்களா? இதுவரை கிடையாது.
நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு எல்லாம் வேலை வாய்ப்பு தருவோம் என்றார். ஆனால் செய்தார்களா? வேலைகள் தான் பறிக்கப்பட்டுள்ளது. இதுதான் மத்தியில் இருக்கக் கூடிய ஆட்சியின் நிலை. மதக்கலவரத்தை ஏற்படுத்தி நாட்டைப் பிளவுப்படுத்தும் கொடிய ஆட்சி நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றும் தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே 'இந்தியா’ என்ற கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி உருவாக தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகள் காரணமாக உள்ளன” என்றார்.
"ஊழலை பற்றி பேச மோடிக்கு தகுதி உண்டா?”
தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோடி எங்குச் சென்றாலும் 'இந்தியா’ கூட்டணி பற்றி விமர்சனம் செய்கிறார். குறிப்பாக திமுகவை பற்றி கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். தமிழ்நாட்டில் ஊழல் நடைபெறுவதாக 9 வருடமாக தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறார் மோடி. ஊழலைப் பற்றி பேசக்கூடிய தகுதி பிரதமர் மோடிக்கு உண்டா? இன்று சிஏஜி அறிக்கையில் பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதையும் ஆதாரம் இல்லாமல் பேசிவில்லை. ஒன்றிய அரசின் 7 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது
ஆயுஷ்மான் பாரத் திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஆய்வு திட்டம், விமான வடிவமைப்பு திட்டம், சுங்கச்சாவடி திட்டம், துவாரகா விரைவு நெடுஞ்சாலை திட்டம் உள்ளிட்டவைகளில் ஊழல் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் போலியான செல்போன் நம்பர் உள்ளது.
ஊழல், மோசடி:
அந்த நம்பரில் 7 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு மோசடி நடைபெற்று உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிகிச்சை பெற்ற 88,760 பேர் இறந்துள்ளனர். ஆனால் அவர்கள் இறந்தபிறகும் சிகிச்சை பெற்று வருவதாக மோசடி நடந்துள்ளது. இதுபோன்று நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தெரிய வரும் என்று சிஏஜி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 600 சுங்கச்சாவடிகளில் 5 சங்கச்சாவடிகளில் மட்டும் சிஏஜி ஆய்வு செய்ததில் ரூ.132 கோடி ஊழல் செய்தது அம்பலமானது. அதேபோல துவாரகா விரைவு நெடுஞ்சாலை திட்டம் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18 கோடியாக இருந்த செலவு ரூ.250 கோடியாக உயர்த்தியுள்ளது என்பது தெரியவந்தது. மேலும், ஒன்றிய அரசு துறை ஊழியர்கள் மீது 1.5 லட்சம் ஊழல் புகாரும், அதில் உள்துறை அதிகாரி மீது மட்டும் 46,000 புகார்கள் பதிவாகி உள்ளதாக" முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.