ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்து வந்த நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.
ஜிகர்தண்டா
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படமான இதில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். பல தரப்பில் இருந்து பாராட்டுகளை பெற்ற அந்த திரைப்படம், பல விருது விழாக்களில் கலந்து கொண்டதுடன் படகுழுவினருக்கு பல பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது. ரஜினிகாந்த் அழைத்து பாராட்டியது, விமர்சகர்கள் பாபி சிம்ஹாவை கொண்டாடியது, என கார்த்திக் சுப்புராஜ் மீது பல எதிர்பார்ப்புகளும் வீழ்ந்தன.
கார்த்திக் சுப்பராஜ்
அதன் பிறகு அவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு, தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைத்த நிலையில் 'ஜிகர்தண்டா அளவுக்கு இல்லப்பா' என்ற பெயர் மட்டும் மாறவே இல்லை. திரை மொழியில் வித்யாசம் காட்டும் அவருடைய இயக்கம் பலரை ஈர்த்துள்ள நிலையில் அவரிடம் இருந்து இன்னும் நல்ல படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வெளியான அறிவிப்பு தான் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. முதல் பாகம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதை தெரிவித்தார். பின்னர் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு சில மாதங்கள் முன்பு வெளியிட்டது.
எகிறிய எதிர்பார்ப்பு
ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் என்று வெளியான டைட்டில் டீஸர் பலரது கவனத்தை ஈர்த்தது. இன்றுவரை கார்த்திக் சுப்புராஜ் - இன் மிகச்சிறந்த திரைப்படம் என்று பலரும் என்னும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு பலரை கவனிக்க வைத்தது. அதோடு இந்த திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வு இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றது. எஸ்.ஜே.சூர்யா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் தோன்றும் அந்த டைட்டில் டீஸர் இது இன்னொரு கேங்ஸ்டர் படம் என்பதை புரிய வைத்தது. குறிப்பாக அதில் லாரன்ஸ் உடைய தோற்றம் மற்றும், எஸ்ஜே சூர்யா உடைய விண்டேஜ் லுக் ஆகியவை இன்னும் ஆவலை தூண்டியது.
தீபாவளி வெளியீடு?
இந்த நிலையில் இந்த சீக்வல் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்ததோடு அதன் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் பலருடைய எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளன. ஏனெனில் ஏற்கனவே தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் போட்டியாக இன்னொரு படமும் இணைந்துள்ளது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் - இன் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக எஸ். திருநாவுக்கரசு பணியாற்றியுள்ளார். சண்டை பயிற்சியில் திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.