பிரதமர் மோடி மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரை விமர்சித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். ஒரே தேர்தலில் வென்று விட்டு காங்கிரஸ் அதிகப்படியாக பேசி வருவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.


தெலங்கானா தேர்தல்:


நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், தென்னிந்தியாவை சேர்ந்த தெலங்கானாவும் ஒன்று. சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த சந்திரசேகர் ராவ் கடந்த சில நாட்களாக அக்கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால், எதிர்வரும் தேர்தல்களில் சந்திரசேகர் ராவ் பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


ராகுல் காந்தி பேசியது என்ன?


இந்நிலையில் தான் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் எனும் பகுதியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திசந்திரசேகர ராவ் பாரதிய ஜனதா கட்சியின் 'பி' கட்சியாக செயல்பட்டு வருகிறார். அந்த கட்சியை பாஜக ரெஷ்தேதார் (உறவு) சமிதி என்று அழைக்கலாம். சந்திரசேகர ராவ் மற்றும் அவரது கட்சியில் உள்ளவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு, அவரை பாஜகவிற்கு அடிபணியச் செய்துள்ளது. சந்திரசேகர ராவ் உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது. அவர் இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் காங்கிரஸ் இருக்காது என்பதை எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் வலியுறுத்துகிறேன்.


ரிமோட் கன்ட்ரோல் யாரிடம் உள்ளது?


சந்திரசேகர ராவ் மோடியிடம் உள்ள ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படுகிறார். சந்திரசேகர ராவ் தன்னை மன்னராகவும், தெலுங்கானா அவருடை ராஜ்ஜியம் என்றும் நினைக்கிறார். கர்நாடகாவில் ஊழல், மக்கள் எதிர்ப்பு அரசுக்கு எதிராக போராடி ஏழை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களால் பாஜகவை தோற்கடித்தோம். அதுதான் தெலுங்கானாவிலும் நடக்கப்போகிறது. ஒரு பக்கம் அரசின் பணக்காரர்களும், அதிகாரம் படைத்தவர்களும் இருப்பார்கள். இன்னொரு பக்கம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு கடைக்காரர்கள் எங்களுடன் இருப்பார்கள். கர்நாடகாவில் என்ன நடந்ததோ அப்படியே தெலுங்கானாவில் நடக்கும். தெலுங்கானாவில் பாஜக இல்லை. அவர்களுடைய நான்கு டயர்களும் பஞ்சராகிவிட்டன. தற்போது காங்கிரஸ் கட்சிக்கும்- பாஜகவின் 'பி' அணிக்கும் இடையில்தான் போட்டிஎன பேசினார். அதோடு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.4000 ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டார்.


குவியும் கணடங்கள்:


இதுதொடர்பாக பேசியுள்ள பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி “முந்தைய காலத்தில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியுடன் சமரசம் செய்து கொண்டு காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், பாஜக அவர்களுடன் கூட்டணி அமைக்காது. கர்நாடகாவில் ஒரு தேர்தலில் வெற்றி பெற்றதால் ராகுல் காந்தி எல்லை மீறி பேசுகிறார் ” என தெரிவித்தார். 


பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவரான தசோஜு ஸ்ரவன் “சந்திரசேகர் ராவ் தொடர்பாக ராகுல் காந்தி பேசியது அடிப்படை ஆதாரமற்றது. அவர் கூறியது அனைத்தும் பொய்களின் மூட்டை. தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் தயாரித்த  திரைக்கதையின் அடிப்படையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் தெரித்துள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமானது” என சாடினார்.