தமிழகத்துக்கு காவிரி நீர் தராமல் வஞ்சிக்கும் கர்நாடகாவுக்கு முதலமைச்சர் சென்றால் “கோ பேக் ஸ்டாலின்” என முழக்கமிடுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  


கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உறுதி என கூறியதுடன், மேகதாது அணை கட்டுவது தொடர்பான திட்டத்தை மத்திய நீர்வள அமைச்சரை சந்தித்து விளக்கியுள்ளார். மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும்,  கர்நாடக அரசின் நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும்,  நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைக்கு புதிதாக ஒரு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவிரி நீர் விவகாரத்தில் பாஜக எந்தவித அரசியலையும் செய்யவில்லை என்றார்.  முதலில் மேகதாது பிரச்சனையை ஆரம்பித்ததே காங்கிரஸ் தான் என குற்றம்சாட்டிய அண்ணாமலை, தேர்தல் வாக்குறுதியாக மேகதாது அணை கட்டப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதாக தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறி இருந்ததாக சுட்டிக்காட்டினார்.  அதன்படி, கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்தார். இதேபோல், நடப்பு ஆண்டின் காவிரி நீர் தமிழகத்துக்கு வழங்க முடியாது என கர்நாடகா அடம்பிடிப்பதாக கூறிய அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டி.கே. சிவகுமாரையும், காங்கிரஸ் கட்சியையும் கண்டிக்க மனம் இல்லை என்றார்.


இந்த சூழலில், வரும் 11ம் தேதி பெங்களூருவில் நடக்க கூடிய அனைத்து எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு எப்படி முதலமைச்சர் செல்ல முடியும் என்றும் தமிழ்நாட்டை தாரை வார்த்து விட்டு செல்வாரா...? என கேள்வி எழுப்பினார்.


மேலும், தனது அரசியல் லாபத்திற்காக கர்நாடகாவுக்கு சென்று விட்டு தமிழகம் திரும்பினால் முதலமைச்சருக்கு எதிராக “கோ பேக் ஸ்டாலின்” சொல்வோம் என எச்சரித்தார். ஒவ்வொரு பாஜக தொண்டனும், விவசாயிகளும் முதலமைச்சருக்கு எதிராக நிற்போம் என்றும், கருப்பு கொடிக்காட்டி ‘கோ பேக் ஸ்டாலின்’ என முழக்கமிடுவோம் என்றார். முதலமைச்சர் வந்திறங்கும் விமான நிலையத்திலேயே  கருப்பு பலூன்கள் பறக்கவிடப்படும் என்றார்.