திமுகவில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதி ஸ்டாலின் அறிந்தே இருப்பார் என்றும் அதை களைவதற்கான வேலையை மாமன்னன் திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


இது குறித்து பா.ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ”மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி MLAக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன். உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 






இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. சமூக அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த 29ஆம் தேதி வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.  கமல்ஹாசனின் ‘தேவர்மகன்’ படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம்தான், மாமன்னன் என்று அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் இப்படம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளானது. இப்படி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மாமன்னன் திரைப்படம் முதல் நாளில் 6 கோடி வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவித்த நிலையில், இப்படம் 4 நாட்களில் சுமார் 23 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மேலும் படிக்க 


PM Modi Residence: அதிகாலையில் வந்த தகவல்...! பிரதமர் வீட்டின் மேல் பறந்தது ட்ரோனா ? அதிர்ச்சி அடைந்த போலீஸ்!


TN Rain Update: மதியம் 1 மணி வரை 23 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.. எந்தெந்த மாவட்டங்களில்.. மழை நிலவரம் இதோ..