இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் இன்று. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் தனது பதிவில், ”இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து” என பதிவிட்டுள்ளார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடலை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர். இவரின் பாடல்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. டிஎம் சௌந்தர்ராஜன் குரலை ஈடுசெய்ய இனி ஒரு பாடகர் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பது அரிது என்று பேசப்பட்ட காலகட்டம் அது. டிஎம்எஸ் பாடல்களைப் பாடி வாய்ப்புக்காக இசையமைப்பாளர்களின் ஸ்டுடியோ படிகளில் ஏறி இறங்கியஎஸ்.பி.பி ஆரம்ப கட்டத்தில் புறக்கணிக்கப்பட்டார். இதற்கு காரணம் அவரின் மோசமான தமிழ் உச்சரிப்புதான். பின் ஓராண்டு பயிற்சி பெற்று தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்ற எஸ்பிபி கிடைத்த முதல் வாய்ப்பில் இருந்து கடைசி நாள்வரை 54 ஆண்டுகளாக எல்லா மொழிகளிலும் சரியான உச்சரிப்புடன் பாடிய பாடகர் என்ற சிறப்புடன் விளங்கினார்.
சங்கீதத்தில் கை தேர்ந்த ஞானம் பெற்றவர் எஸ் .பி. பாலசுப்ரமணியம். எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண் படத்தில் அவர் பாடிய பாடல் தான் ஆயிரம் நிலவே வா. இந்த பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் எஸ்.பி.பி. 1960 களில் தமிழ் திரையுலகில் அறிமுகமான எஸ்.பி.பி தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி பாடகராக இருந்தார். 1991 ஆம் ஆண்டு எஸ் பி பாலசுப்ரமணியம் இசையமைத்து நடித்து வெளியான சிகரம் திரைப்படத்தில் நடிப்பு இசை என இரண்டு துறைகளிலுமே தனது புலமையையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தியிருப்பார் எஸ்பிபி.
பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய இந்திய அரசின் மிக உயரிய விருதுகளை வென்ற எஸ் பி பாலசுப்ரமணியம் தலைமுறைகள் கடந்தும் தன்னை தகவமைத்துக் கொண்டு தமிழ், தெலுங்கு, கனடா உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி தனக்கென தனி முத்திரையை படைத்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் மறைந்தாலும் பாடல்களின் வழியே எண்ணற்ற ரசிகர்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் எஸ்.பி.பி.
மேலும் படிக்க