Sivaji Ganesan to bharathiraja: செத்துட்டேன்னு நினைச்சேன்.. அதனால இதை மட்டும் பண்ணாத.. பாரதிராஜாவுக்கு சிவாஜி கொடுத்த அட்வைஸ்..! 

வீட்டில் வாசனை வரும் அளவிற்கு, கை எட்டும் தூரத்தில் எடுக்கும் அளவிற்கு, அழைத்தால் உடன் உதவிக்கு யாராவது வரும் அளவிற்கு சிறிய அளவில் வீட்டை கட்டினால் போதுமானது என பாரதிராஜாவுக்கு சிவாஜி சொன்ன அறிவுரை

Continues below advertisement

ஒரு தமிழ் சிறுகதை எழுத்தாளர், கவிஞர், நடிகர், கதைசொல்லி என பன்முகம் கொண்டவராக விளங்குபவர் பவா செல்லதுரை. இன்றைய காலகட்டத்தில் யூடியூப் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. அப்படி இருக்கையில் நல்ல நூல்களை பற்றி மக்களுக்கு அறிமுகப்படுத்துவது என்பது ஒரு கடினமான ஒன்றாகிவிட்டது. இந்த நிலையில் தான் கதை சொல்லிகளின் அவசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. வேகமாக சுழலும் வாழ்க்கை சக்கரத்தின் ஓட்டத்தில் நூல்களை வாசிக்க நேரம் இல்லாமல் தவிப்பவர்கள் முதல் இன்றைய 2 கே கிட்ஸ் வரையில் பல தரப்பு மக்களுக்கும் கதை மூலம் புத்தகத்தை கொண்டு சேர்க்கும் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகிறார் கதைசொல்லி  பவா செல்லதுரை. 

Continues below advertisement

அந்த வகையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மேடையில் நடிகர் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்த ஒரு கதை மிகவும் சுவாரஸ்யமாகவும் சிந்தனையை தூண்டும் விதமாகவும் அமைந்து இருந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் பாரதிராஜாவிடம் கூறிய ஒரு தகவலை மிகவும் அழகாக பகிர்ந்து இருந்தார்.

மாரடைப்பு  ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது சிவாஜி கணேசனை நலம் விசாரிப்பதற்காக இயக்குநர் பாரதிராஜா நேரில் சென்றுள்ளார். முடியாமல் எழுந்து உட்கார்ந்த சிவாஜி கணேசனிடம் பாரதிராஜா என்ன நடந்தது என கேட்கவும் மதியம் சாப்பிட்ட பிறகு இரண்டு மணிநேரம் தூங்குவது வழக்கம். உடன் மனைவி கமலாவும் தூங்குவார். சரியாக மாலை 4 மணிக்கு காபி போடுவதற்காக கமலா சென்று விடுவார். அன்றைக்கு பார்த்து நெஞ்சு வலி வரவே நாக்குக்கு அடியில் வைக்கும் மாத்திரை அருகில் இருக்கும் மேசையில் இருக்கும். அதை வைத்து கொண்டால் நான் பிழைத்து விடுவேன் என நினைத்தேன்.

ஆனால் என்னால் அதை எழுந்து எடுக்க முடியவில்லை. அவ்வளவு தான் என்னோட கதை இன்று  முடிந்துவிட்டது என முடிவு செய்தேன். அந்த நேரத்தில்தான் கமலா காபியுடன் வந்து நின்றார். அதற்கு பிறகு இதோ நான் இங்கே வந்து படுத்து இருக்கிறேன் என சிவாஜி பாரதிராஜாவிடம் கூறியுள்ளார். 

மேலும் பாரதிராஜாவிடம் நீ வீடு கட்டிவிட்டாயா என கேட்டுள்ளார். அதற்கு அவரும் நான்கு வீடுகள் கட்டியுள்ளேன் என்றாராம். பெரிய வீடா இல்லை சின்ன வீடா என கேட்டுள்ளார் சிவாஜி. சுமாரான அளவுதான் ஏன் கேக்குறீங்க? என பாரதிராஜா  சிவாஜியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்னாராம், இல்லை தயவு செய்து பெரிய வீடா கட்டாத. நான் பிரபு, ராம் என கத்தி கத்தி கூப்பிட்டேன். படங்களில் நான் எவ்வளவு சத்தமாக பேசுவேன் என அனைவருக்கும் தெரியும். அப்படி உரக்க கத்தி கூப்பிட்டு பார்த்தேன் ஆனால் ஒருத்தரும் வரவில்லை. அதனால வீட்டில் வாசனை வரும் அளவிற்கு, கை எட்டும் தூரத்தில் எடுக்கும் அளவிற்கு, அழைத்தால் உடன் உதவிக்கு யாராவது வரும் அளவிற்கு சிறிய அளவில் வீட்டை கட்டினால் போதுமானது என பாரதிராஜாவிடம் சிவாஜி அறிவுரை கூறியுள்ளார் என்ற இந்த கதையை மிகவும் அழகாக மேடையில் பகிர்ந்தார் கதைசொல்லி பவா செல்லதுரை. 

Continues below advertisement