சுந்தர் சி


தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வசூல் ரீதியாக வெற்றிபெற்ற படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . அடுத்தடுத்த சுமார் படங்கள் வெளியாகி காத்தாடிக் கொண்டிருந்த திரையரங்குகளுக்கு ஓரளவிற்கு பெரிய கூட்டத்தை இழுத்து வந்தது சமீபத்தில் வெளியான அரண்மனை 4. முந்தைய மூன்று பாகங்களின் அதே கதை தான் இந்தப் படத்திலும் என்று தெரிந்தபோதும் ரசிகர்கள் இந்தப் படத்தை குடும்பத்துடன் வந்து திரையரங்கில் பார்த்து சென்றார்கள். ஃபேமிலி ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் செண்டிமெண்ட் , காமெடி போன்ற அம்சங்களை தனது படங்களின் பெரிய பலமாக கொண்டிருக்கிறார் சுந்தர் சி. அரண்மனை 4 படத்தின் வெற்றி சுந்தர் சியின் அடுத்த படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அவர் இயக்கி விஷால் நடித்து நீண்ட  நாட்களாக கிடப்பில் இருந்த மதகஜ ராஜா படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. ஒரு பக்கம் இந்தப் படத்திற்கான ரிலீஸ் வேலைகள் சென்றுகொண்டிருக்க தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பையும் சைலண்டாக தொடங்கி இருக்கிறார்.


மீண்டும் இணையும் வடிவேலு சுந்தர் சி கூட்டணி






சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் அவரே நாயகனாக நடிப்பதாகவும் ராஷி கண்ணா இப்படத்தில் நாயகியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதல் தகவல் என்னவென்றால் நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படத்தில் சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த தலைநகரம் மற்றும் நகரம் மறுபக்கம் உள்ளிட்ட படங்களில் காமெடி காட்சிகள் இன்றும் சிரிப்பை வரவழைப்பவை. மேலும் சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்த கிரி , மருதமலை , உள்ளிட்ட படங்களில் வடிவேலுவின் சிறந்த காமெடி காட்சிகள் உருவாகியுள்ளன. தற்போது கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி இந்த புதிய படத்தில் இணைய இருப்பது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தென்காசியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.




மேலும் படிக்க : Coolie: ரஜினிக்கு வில்லனாகிறாரா நாகர்ஜூனா? கூலி படத்தில் திரளும் நட்சத்திரங்கள்