கூலி


ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த்  நடிப்பில் வேட்டையன் மற்றும் கூலி ஆகிய இரு படங்கள் உருவாகி வருகின்றன. த.செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் , துஷாரா விஜயன் , ரித்திகா சிங் , மஞ்சு வாரியர் , ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வேட்டையன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


இதனைத் தொடர்ந்து ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் ரஜினி லோகேஷ் கனகராஜின் கூலி படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.  ஜெயிலர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி மீண்டும் இணைந்துள்ளார்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகியபடி உள்ளன.


கூலி பட நடிகர்கள் 


கூலி படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ரஜினிகாந்த் நடித்த தம்பிக்கு எந்த ஊரு, மூன்று முகம், நான் சிகப்பு மனிதன் ,மிஸ்டர் பாரத், பாயும் புலி உள்ளிட்ட படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார் சத்ய்ராஜ் . மிஸ்டர் பாரத் படத்தைத் தொடர்ந்து ரஜினி மற்றும் சத்யராஜூக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக சினிமா வட்டாரங்களில் நிறைய கதைகள் பரவியுள்ளன. கிட்டதட்ட 38 ஆண்டுகள் கழித்து ரஜினியுன் சத்யராஜும் இப்படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஒரு மாற்றத்திற்காக இப்படத்தில் ரஜினியும் சத்யராஜும் இப்படத்தில் நண்பர்களாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


அடுத்தபடியாக தளபதி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஷோபனா இப்படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த சில தினங்கள் முன்பு தகவல்கள் வெளியாகின. இவர்கள் தவிர்த்து மலையாள நடிகர் செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகின.


ரஜினிக்கு வில்லனாகும் நாகர்ஜூனா






தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி கூலி படத்தில் ரஜினிக்கு நடிகர் நாகர்ஜூனா வில்லனாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நாகர்ஜூனா சேகர் கம்மூலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். கூலி பட நடிகர்கள் குறித்தான அதிகாரப் பூர்வ தகவல்களை விரைவில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.