Delhi Rain: டெல்லியில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கனமழை:
தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நொய்டா உள்ளிட்ட பகுதிகளில், அதிகாலை முதலே கனமழை கொட்டி வருகிறது. இதனால், பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. பிரதான தேசிய நெடுஞ்சாலைகளில் கூட, மழைநீர் வடியாமல் முற்றிலும் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நீண்ட தூரத்திற்கு சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், அவை ஒவ்வொன்றாக ஊர்ந்து செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. சில பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
தொடரும் கனமழை எச்சரிக்கை:
தொடர் மழை காரணமாக டெல்லியில் இதுவரை 13 நீர்நிலைகள் சரிந்து விழுந்துள்ளன. எட்டு மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. ஆனால், ஆபத்தறியாமல் கேசவ்புரம் மண்டலத்தில் தண்ணீரில் மூழ்கியுள்ள ராம்புரா சுரங்கப்பாதை ஏராளமான சிறுவர்கள் குளித்து விளையாடிக்கொண்டுள்ளனர். இதனிடையே, டெல்லியில் மிதமானது வரையிலான மழை தொடரும் என கூறியுள்ள, இந்திய வானிலை மையம் சனிக்கிழமை வரை மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதோடு, வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.