வால்மீகி எழுதிய ராமாயணம் கதையை அடிப்படையாகக் கொண்டு, 500 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ் . பிரபாஸ், சயீஃப் அலிகான், கீர்த்தி சனோன், உள்ளிட்ட பலரின் நடிப்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தை பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் கடந்த 16-ம் தேதி இப்படம் வெளியானது.
நேபாள நாட்டில் திரையிட திட்டமிடப்பட்டு இருந்த ஆதிபுருஷ் படத்தின் வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுப்பற்றி நேபாள நாட்டின் காத்மண்டு நகர மேயர் பலேந்திர ஷா வெளியிட்ட பேஸ்புக் பதிவில், ஆதிபுருஷ் இந்திய படத்தில், ஒரு வசனம் வருகிறது. அதில், சீதா இந்தியாவின் மகள் என தெரிவிக்கின்றது. இது ஆட்சேபனைக்கு உரியது. இதனை சரி செய்ய கூறி நாங்கள் 3 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். நேபாளத்தின் சுதந்திரம், சுயமரியாதையை தக்க வைத்து, தேச நலனை பாதுகாப்பது என்பது அரசு அமைப்பின், அரசு சாரா பிரிவு மற்றும் நேபாள குடிமகனின் முதல் கடமை” என அவர் தெரிவித்து உள்ளார். நேபாளம் சீதை தனது நாட்டின் மகள் என கூறி வருவதால், இந்த வசனம் அதற்கு மாறாக உள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதனை தொடர்ந்து, அவர் அனைத்து இந்திய படங்களுக்கும் தடை விதித்ததுடன், காத்மண்டு பெருநகர போலீசாரை திரையரங்கம் முன் குவித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து பொகாரா நகர மேயரும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, இன்று (19.06.2023) காலை முதல் அனைத்து இந்திய திரைப்படங்களையும் திரையிட தடை விதிக்கப்படுகிறது என அறிவித்து உள்ளார். இரண்டு மேயர்களின் உத்தரவுகளை தொடர்ந்து, திட்டமிடப்பட்ட நேரத்தில் திரையிடப்பட இருந்த இந்திய திரைப்படங்கள் ரத்து செய்யப்பட்டன. அவற்றுக்கு பதிலாக ஹாலிவுட் மற்றும் நேபாள படங்கள் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆதிபுருஷ் படம் வெளியான இரண்டு நாட்களில் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், சனிக்கிழமை 100 கோடி ரூபாயும் வசூலித்தது. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் இப்படம் 5 கோடி ரூபாய் அளவிலேயே வசூலித்துள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தில் மட்டும் இப்படம் குறைவாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க