Mexico Earthquake: மெக்சிகோவில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் 6.3 என்ற ரிக்டர்  அளவுகோலில் பதிவாகி உள்ளது.  இங்கு 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, பிரிட்டிஷ், கொலம்பியா அல்லது அலாஸ்காவிற்கு சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.






சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.


இதுவரை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்கள்


கடந்த மே 31ஆம் தேதி நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள ஆக்லாந்து தீவுகளில் புதன்கிழமை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) சுட்டிக்காட்டியுள்ளது.


கடந்த மே 29ஆம் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள சோனித்பூரில் காலை 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கையின்படி, 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. 


கடந்த மே 28ஆம் தேதி ஆப்கானிஸ்தான் ஃபைசாபாத் பகுதியில்  காலை 11.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஃபைசாபத் பகுதியில் இருந்து 220 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் 5.2  என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 100 க்கும் அதிகமானோர் பலியாகினர். அதேபோல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.