வட்டமான முகம், ஹோம்லி லுக், மெல்லிய சிரிப்பு, மென்மையான நடிப்பு என ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை சுவலட்சுமிக்கு இன்று பிறந்த நாள்.
கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட சுவலட்சுமி 1994ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த ஆசை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவர் 1996ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கோகுலத்தில் சீதை, நிலவே வா, நீ வருவாய் என, லவ் டுடே, இனியவளே, பொன்மனம், தினந்தோறும், சுயம்வரம், மாயி, பொட்டு அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஜய், அஜித், பிரபுதேவா, கார்த்திக், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த சுவலட்சுமிக்கு 90-களில் தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. வட்டமான முகம், அழகிய கண்கள், ஹோம்லி கேர்ளாக திரையில் தோன்றிய சுவலட்சுமி திரைத்துறையில் தனக்கு என தனி இடத்தை தக்க வைத்து கொண்டிருந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், வங்காளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்த சுவலட்சுமி திருமணத்திற்கு பிறகு திரையில் நடிப்பதை தவிர்த்தார்.
சிறுவயதில் இருந்தே பாரம்பரிய நடனம் மற்றும் நாட்டுப்புற நடனங்களில் ஆர்வமாக இருந்த சுவலட்சுமி மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடித்துள்ளார். அவரின் நடிப்பு திறமையை பார்த்த வங்காள இயக்குநர் சத்யஜித் ராய், சுவலட்சுமியை உட்டோரன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்துள்ளார். அதன்பின்னர், தமிழ் திரையுலகில் ஆசை படம் மூலம் அறிமுகமானார். ஹீரோயினாக மட்டும் இல்லாமல் கல்கி, நீ வருவாய் என, சுயம்வரம் உள்ளிட்ட படங்களில் கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ளார். சுவலட்சுமி, விஜய் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே படம் 100 நாள்கள் திரையிடப்பட்டு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூலம் தொடரிலும் சுவலட்சுமி நடித்து வந்தார்.
1994ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை குடும்பத்தை மையப்படுத்திய கேரக்டர்களில் மட்டுமே நடித்து அனைவருக்கும் பிடித்த நடிகையாக வலம் வந்த இவர் அதன்பிறகு திரை வாழ்க்கைக்கு GoodBye சொன்னார். விஞ்ஞானியான ஸ்வகாடோ பானர்ஜியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சுவலட்சுமி, ஜெனீவா, சுவிட்சர்லாந்து, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை சுவலட்சுமி தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறை நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க: 1 Year Of Thiruchitrambalam : தேன்மொழி பூங்கொடி வாடிப்போச்சே என் செடி.. ஓராண்டை நிறைவு செய்யும் திருச்சிற்றம்பலம்
Maamannan: சாதி பெருமைக்காக ஃபகத் பாசில் கொண்டாடப்பட்டாரா? : முதல் முறையாக பதிலளித்த மாரிசெல்வராஜ்