மித்ரன் கே ஜவகர் இயக்கத்தில் தனுஷ் , பிரகாஷ் ராஜ் , பாரதிராஜா,  நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது திருச்சிற்றம்பலம்.


எது மாஸ்?


அவ்வப்போது தனுஷ் நடிக்கும்  சுமாரான படங்களில் ஒன்றாக இருக்கப்போகிறது என்பதுதான் திருச்சிற்றம்பலம் படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர்கள் ஏன் இசைவெளியீட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்த பெரும்பான்மையான ரசிகர்களின் மனப்பான்மையாக இருந்தது. போதாத குறைக்கும் தனுஷ் மேடையில் பேசிய எது மாஸ் என்கிற வசனங்கள் க்ரிஞ்சு என்று ரசிகர்கள் கலாய்த்தனர்.


ஆனால் தனது கரியரின் உச்சத்தில் இருக்கும்  மாஸ் நடிகர் ஒரு சண்டைக்காட்சி கூட இல்லாத  படத்தில் நடித்து அந்தப் படத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவழைக்க அப்படியான வார்த்தைகளை பேசவேண்டிய அவசியம் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறது.


திருச்சிற்றம்பலம்


தனது அப்பாவின் ஒரு தவறால் கடைசிவரை வன்முறையை தவிர்த்து வரும் கதாநாயகன். அதற்காக தன்னை கோழை என்று எத்தனை பேர் சொன்னாலும் அதைப்பற்றி அவர் கவலைப்படப் போவதில்லை. ஜாலியான தனது தாத்தா, மனதிற்கு நெருக்கமான ஒரு தோழி என்று தனது வாழ்க்கையை ஓட்டிவரும் திருச்சிற்றம்பலத்திற்கு வாழ்க்கையில் காதல் என்கிற ஒன்று மட்டும் செட் ஆவதே இல்லை. அவன் காதலில் விழும் ஒவ்வொரு பெண்ணும் ஏதோ இரு வகையில் ஏமாற்றத்தையே தருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையில் தனது போலீஸ்கார அப்பாவுடனான முறிந்த உறவு ஒருபக்கம். எல்லாம் சுற்றிவந்து தனது நெருங்கிய தோழியிடமே தனது காதலைக் கண்டடைகிறார் பலம் என்னும் திருச்சிற்றம்பலம்.


தனுஷ் நிகழ்த்தும் அற்புதங்கள்


எந்த விதமான திருப்பங்களும் இல்லாத இப்படியான ஒரு கதையை முழுக்க முழுக்க நடிப்பால் மட்டுமே சலிப்படையாத இரு அனுபவமாக மாற்ற முடியும். இதை தனுஷைத் தவிர ஒரு நடிகர் செய்திருக்க முடியும் என்பது சந்தேகம்தான். மேலும் படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றால் அனிருத் மற்றும் தனுஷின் கூட்டணியில் உருவாகும் மேஜிக்கலான பாடல்கள். என்றோ ஜெமினி கணேசன் பாடிய மயக்கமா கலக்கமா? என்கிற ஒரு பாடலை மீண்டும் இவ்வளவு பெரிய ஹிட் ஆக்கமுடியும் என்றால் அது இவர்களால்தான் முடியும்.


எல்லாவற்றுக்கும் மேலாக படத்தில் சண்டைக் காட்சிகள் வைத்து சமரசம் செய்வதற்கான எத்தனையோ  இடங்கள் இருந்தும் அந்த சமரசத்தை கடைசிவரை இயக்குநர் செய்யவில்லை. நேர்மையாக பாவனைகள் இல்லாமல் ஒரு கதை சொல்லப்பட்டால் அது நிச்சயம் வெற்றிபெறும் என்பதற்கு திருச்சிற்றம்பலம்தான் எடுத்துக்காட்டு.


மிஷின் துப்பாக்கிகள் நிறைந்து கிடக்கும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது தீபாவளி துப்பாக்கிகள் வைத்து விளையாடும் ஒரு படமும் தேவைப்படுகிறதுதான்.