மாமன்னனில் சாதி பெருமையை கூறும் ரத்னவேல் கதாபாத்திரத்தை ஒரு சிலர் கொண்டாடுவது குறித்து முதல் முறையாக இயக்குநர் மாரிசெல்வராஜ் காட்டமாக பேசியுள்ளார். 


மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் மாமன்னன். கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி திரையங்கில் வெளிவந்த இந்த திரைப்படம் விமர்சனத்தையும் தாண்டி, வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையரங்கை தாண்டி ஓடிடி தளத்திலும் வெளியான மாமன்னன் நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தது. 


இந்த நிலையில் மாமன்னன் திரைக்கு வந்த 50-வது நாளை சென்னையில் விழா எடுத்து, படக்குழு சிறப்பாக கொண்டாடியது. இதில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் மாமன்னன் குறித்து படக்குழுவினர் நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டானது. நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் மாரிசெல்வராஜ் முதல்  முறையாக ரத்னவேல் கேரக்டர் குறித்து பேசினார். 


அவரிடம், மாமன்னனில் சாதி ஆணவத்தை கொண்ட ரத்னவேல் கேரக்டரில் நடித்த ஃபகத் பாசிலை கொண்டாடுவதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த  மாரிசெல்வராஜ், “படத்தில்தான் வைத்திருந்த கதாப்பாத்திரம் கொண்டாடப்படுகிறது” என்றார். அடுத்ததாக மாமன்னனில், நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை மக்கள் தவறாக புரிந்து கொண்டனரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு, “ரத்னவேல் கேரக்டரை கொண்டாடியவர்களை கேளுங்கள். படத்தில் உள்ள எல்லா படைப்புகளும் மக்களிடம் சென்று சேர வேண்டும் என உருவாக்கப்பட்டது. மக்களிடம் அது எப்படி சென்று சேர்ந்தாலும், மக்கள்தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படம் 4 நாட்களில் முடிந்து போவது இல்லை. ஆண்டு கணக்கில் பேசப்படும். அதனால், படத்தில் உள்ள எல்லா கேரக்டர்களும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நிறம் மாறும். எல்லா கேரக்டரும் அதன் உண்மையை பேசும். உண்மையை பேசத்தான் படம் எடுக்கிறோம். படம் பார்க்க பார்க்க உண்மை பேசப்படும்” என கோபத்துடன் மாரி செல்வராஜ் பதிலளித்தார். 


முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி சுரேஷ், மாமன்னனை போல், தைரியமான ஒரு கேரக்டரில் பெண்களால் நன்றாக நடிக்க முடிகிறது என்றால் அது மாரிசெல்வராஜ் போன்ற இயக்குநர்கள் இருப்பதால்தான் என பேசி இருந்தார். 


படத்தில் மாமன்னனாக நடித்திருக்கும் வடிவேலுவையும், அவரது மகனாக நடித்திருக்கும் அதிவீரனையும் சாதி வன்மத்தால் எதிர்க்கும் ஆதிக்க குணம் கொண்ட ரத்னவேல் கேரக்டராக ஃபகத் பாசில் நடித்திருப்பார். இதனால் ஒருசிலர் ஃபகத் பாசிலின் ரத்னவேல் கேரக்டரை சாதி பெருமை பேசும் பாடல்களுக்கும், இசைக்கும் ட்ரோல் செய்து டிரெண்டாக்கி வந்தனர். திடீரென சாதி வன்மத்தை தூண்டும் விதமாக ரத்னவேல் கேரக்டர் கொண்டாடப்பட்டதால், ஃபகத் பாசில் தன்னுடைய பேஸ்புக்கில் வைத்திருந்த மாமன்னன் கேரக்டரின் முகப்பு படத்தை நீக்கும் நிலை ஏற்பட்டது. 


மேலும் படிக்க: Shah Rukh Khan: 'வாழ்க்கை ஒரு வட்டம்'... ஷாருக்கானின் வாழ்க்கையில் இரண்டு முறை நடந்த ஒரே சம்பவம்..!