ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு தவறான பெயரில் பட்டா விநியோகிக்கப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டா என்றால் என்ன?
தமிழ்நாட்டில் ஒருவரது சொத்து மீதான சட்டரீதியிலான உரிமையை நிரூபிக்கும் ஆவணம்தான் ‘பட்டா’ என்று அறியப்படுகிறது. பட்டா என்பது ஒரு நிலத்துக்காக வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம் ஆகும். தமிழ்நாடு பட்டா சிட்டா நிலப் பதிவேடு வசதியை பொதுமக்களுக்காக மாநில அரசு தொடங்கியது முதலே பட்டா ஆவணத்தை ஆன்லைன் மூலமாகவே டவுன்லோடு செய்துகொள்ளலாம். வருவாய்த் துறையின் கீழ் இந்த சேவை அளிக்கப்படுகிறது. இந்த பட்டாவில் பட்டா எண், மாவட்டம், வட்டம், கிராமம் ஆகியவற்றின் விவரங்களோடு, உரிமையாளர் மற்றும் அவரது தந்தையின் பெயர், சர்வே எண் மற்றும் உட்பிரிவு, நன்செய் நிலம் / புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி மற்றும் தீர்வை விவரங்கள் ஆகிய விவரங்களும் இடம்பெற்று இருக்கும்.
புதிய பிரச்னை:
இந்நிலையில் தான் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் என்பவர் பட்டா கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். அதன்படி கிடைக்கப்பெற்ற பட்டாவை கண்டு அவர் அதிர்ச்சியைடைந்ததோடு, பட்டா விவரங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மனுதாரரின் தந்தையின் பெயர் “The moon” என அச்சிடபட்டுள்ளதே இந்த அதிருப்திக்கு காரணம்.
சர்ச்சைக்குள்ளான பட்டா
நடந்தது என்ன?
விண்ணப்பதாரர் தனது மனுவில் தந்தையின் பெயரை சந்திரன் என குறிப்பிட்டுள்ளார். அது அப்படியே கூகுள் மொழிபெயர்ப்பில் போட்டது போன்று “The moon” என அச்சிடப்பட்டுள்ளது. இது குறித்து மனுதாரர் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபொழுது நீங்கள் பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் பொழுது பட்டா ஆங்கிலத்தில் வேண்டுமா அல்லது தமிழில் வேண்டுமா என்று கூற வேண்டும். ஏதாவது ஒரு மொழியில் மட்டும் தான் இந்த மென்பொருள் சரியாக அச்சடிக்கும் என்றும் விளக்கியுள்ளனர்.
குவியும் கண்டனங்கள்:
ஒருவேளை விண்ணப்பதாரர்களின் தந்தை பெயர் குடியரசு, சூர்யா, வெற்றி, சுதந்திர கொடி என்பன போன்று இருந்தால், பட்டாவில் என்னவாக அச்சாகி இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு, பட்டா பரிதாபங்கள் என, குறிப்பிட்ட பட்டாவின் புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பொதுவாக நிலம் தொடர்பான சிவில் வழக்குகளில் பட்டா போன்ற ஆவணங்கள் தான் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படி இருக்கையில் பட்டாவில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டால், எதிர்காலத்தில் ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்பட்டால் அது பெரும் பிரச்னையாக மாறும் வாய்ப்பு உள்ளது. எனவே அரசு உடனடியாக செயல்பட்டு கூகுள் மொழிபெயர்ப்பு அடிப்படையில், பட்டா வழங்குவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.