Actress Maanu on Ajith: காதல் மன்னன் படத்தில் தன்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்ததாக திலோத்தமாவாக நடித்த மானு தெரிவித்துள்ளார்.


காதல் மன்னன் ஹீரோயின்:


டும் டும், காதலா காதலா, உல்லாசம் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள கார்த்திக் ராஜா மலேசியாவில் 'டும் டும் டும்' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது  செய்தியாளர்களை சந்தித்த மானு, காதல் மன்னன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 


1998ம் ஆண்டு சரண் இயக்கத்தில் அஜித் நடித்த காதல் மன்னன் படம் வெளியானதில் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மானு, விவேக், எம்.எஸ்.விஸ்வநாதன், கரண், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்து காட்சிகளையும், கதைக்களத்தையும் கொண்ட காதல் மன்னன் படம் இன்றும் ரசிகர்களின் ஒன் ஆஃப் தி பேவரைட் படமாக உள்ளது. 


அசாம் முன்னாள் முதலமைச்சரின் பேத்தி:


அஜித்தின் துள்ளல் நடிப்புக்கு ஈடு கொடுத்து, அழகாக ஹோம்லி லுக்கில் நடித்திருப்பார் மானு. திலோத்தமாவாக நடித்த மானு 90 கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவே மாறினார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து மானு பகிர்ந்து கொண்டார். அதில், தனது தாத்தா அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்ததாகவும், படிப்புக்காக சென்னை வந்ததாகவும் கூறியுள்ளார். 


அப்போது தன்னை பார்த்த விவேக் மற்றும் இயக்குநர் சரண் கட்டாயப்படுத்தி காதல் மன்னன் படத்தில் நடிக்க வைத்ததாகவும் மானு குறிப்பிட்டுள்ளார். ஆனால், படிப்பு தான் முக்கியம் என தோன்றியதால் நடிப்பில் கவனம் செலுத்தாமல் ஒதுங்கியதாகவும், காதல் மன்னன் படம் தனக்கு மிகப்பெரிய அனுபவத்தை அளித்ததாகவும் மானு கூறியதாக தகவல் வைரலாகி வருகிறது.


அஜித் பற்றி மானு:


மேலும், 20 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்கள் மனதில் திலோத்தமாவாக இருப்பது தனக்கு கிடைத்த பெருமை என குறிப்பிட்ட மானு, தனக்கு முதல் படம் என்பதால் அஜித் பணிவுடனும், எளிமையாகவும் நடந்து கொண்டதாக மானு குறிப்பிட்டுள்ளார். 


சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட மானு கதக், பரதநாட்டியம் மற்றும் மணிப்பூர் என பல கலைகளை கற்றுள்ளார். ஒரு முறை மேடை நிகழ்ச்சியில் மானுவின் நடனத்தை பார்த்த பின்னர் காதல் மன்னன் படத்தில் அவரை நடிக்க வைக்க இயக்குநர் சரணிடம் விவேக் பரிந்துரைத்துள்ளார். காதல் மன்னன் படத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கிய மானு, 2014ல் வெளிவந்த  'என்ன சத்தம் இந்த நேரம்' என்னும் படத்தில் மட்டும் நடித்துள்ளார். இரண்டே படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத திலோத்தமாவாக வலம் வருகிறார் மானு. 


மேலும் படிக்க: Leo Release Date: ரிலீசுக்கு முன்னதாக ப்ரிமீயர் ஷோ.. அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகிறதா லியோ?


Leo Runtime: லியோ படத்தின் ரன் டைம் இதுதான்.. குஷியில் விஜய் ரசிகர்கள்!