லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்திருக்கும் லியோ (Leo) திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் , த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் உள்ளிட்டோர் இந்த ட்ரெய்லரில் காணப்பட்டார்கள். அனிருத் இசையமைத்து 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


ஹாலிவுட் பட தழுவல்


ஹாலிவுட்டில் வெளியான ‘எ ஹிஸ்டரி அஃப் வயலன்ஸ்’ என்கிற திரைப்படத்தின் கதையைத் தழுவி லியோ திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருக்கும் நிலையில். லியோ திரைப்படத்தின் ட்ரெலர் வெளியான நாளில் இருந்து இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.


மேலும் அந்தப் படத்தின் கதையை மட்டும் எடுத்துக் கொண்டு அதில் தனக்குத் தேவையான மாற்றங்களை லோகேஷ் கனகராஜ் செய்திருப்பதால் லியோ திரைப்படம் பார்வையாளர்களுக்கு புது விதமான அனுபவமாக இருக்கும் என்று இணையவாசிகள் கூறுகிறார்கள்.


லியோ ரிலீஸ்


வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் நாடு முழுவதும் மொத்தம் ஆயிரம் திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாக இருக்கிறது.


சிறப்புக் காட்சிகளுக்கு தடை


பொதுவாகவே விஜய், அஜித் நடிக்கும் படங்களுக்கு அதிகாலை மற்றும் நள்ளிரவு சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும். ஆனால் இந்த ஆண்டு துணிவு படத்தின் ரசிகர் காட்சியில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து திரைப்படங்களுக்கான சிறப்புக் காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிகள் நடைபெறுமா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதே அவர்களுக்கு கிடைத்துள்ள பதில்.


இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் அதாவது 18ஆம் தேதி மாலை மற்றும் இரவு ப்ரிமீயர் ஷோவாக வெளியிடப்பட இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்தத் தகவல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் 18ஆம் தேதி லியோ படத்துக்கான டிக்கெட்களை இணையதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருவது பலவிதமான குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


தளபதி 68


லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். மீனாக்‌ஷி செளதரி, பிரஷாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து  வருகிறது. தந்தை -  மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. லியோ திரைப்படத்தின் ரிலீசுக்குப் பின் இந்தப் படம் குறித்தான கூடுதல் தகவல்கள் வெளியாகும் என படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.