கில்லி ரீரிலீஸ்


விஜய் த்ரிஷா நடித்துள்ள கில்லி படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு வெளியான மற்ற படங்களைக் காட்டிலும் ஒரே நாளில் 10 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.


விஜயின் படம். தமிழ், தெலுங்கு தவிர்த்து மலேசியா , சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கில்லி படத்திற்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து  நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். 


விஜய் த்ரிஷா காம்போ


தமிழ் சினிமாவின் சிறந்த ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி என்றால் கண்களை மூடிக்கொண்டு விஜய் மற்றும் த்ரிஷாவை குறிப்பிடலாம் . கில்லி, திருப்பாச்சி , ஆதி, குருவி, லியோ,  என இருவரின் நடிப்பில் மொத்தம் ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ரசிகர்களை கவர்ந்தது கில்லி. த்ரிஷா நடித்த தனலட்சுமி கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை வைத்து கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு இந்த கேரக்டர் ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறது.


ஆனால் ஒருவேளை ஒரு சின்ன மற்றத்தால் இந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு பதிலாக நடிகை கிரண் நடித்திருந்தால் இப்போது இருக்கும் அதே கெமிஸ்ட்ரி நமக்கு இந்தப் படத்தில் கிடைத்திருக்குமா? ஆம் கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தது  நான்தான் என்று நடிகை கிரண் தெரிவித்துள்ளார்.


காதலில் விழுந்து கில்லி படத்தை தவறவிட்ட கிரண்..


ஜெமினி , வில்லன் , அன்பே சிவம் , வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை கிரண் . நடிகர் விஜய் நடித்த திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் வந்து நடனமாடியிருப்பார்.  கில்லி படத்தில்  நடிகை த்ரிஷா நடிக்க மறுத்துவிட்ட பின் இந்தப் படத்தில் அவர் நடிக்க இருந்ததாகவும் ஆனால் இந்த வாய்ப்பை தவறவிட்ட காரணத்தையும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் கிரண்.


இதில் அவர் “கில்லி படத்தில் த்ரிஷா முதலில் நடிக்க மறுத்துவிட்டார். அவருக்கு அடுத்து நான் இந்தப் படத்தில் நடிக்க இருந்தேன் . ஆனால் அப்போது நான் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தேன். நான் என்னுடைய வேலையை அவ்வளவாக காதலிக்கவில்லை. அதனால் நான் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன். நான் காதலில் இருந்த காலத்தில் நிறைய நல்ல படங்களை தவறவிட்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் இளம் நடிகைகளுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். சினிமாவிற்குள் வந்தால் தயவு செய்து காதலிக்க மட்டும் செய்யாதீர்கள். இன்று நான் எனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்யும் ரீல்கள் எல்லாம் விஜய் பாடல்கள்தான்” என்று கிரண் தெரிவித்துள்ளார்