ரத்னம்


ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ரத்னம். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள நிலையில் சமுத்திரகனி , யோகி பாபு, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டவர்கள் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரு படங்களை ரீரிலீஸ் செய்ய இருப்பதாக இயக்குநர் ஹரி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


தாமிரபரணி


ஹரி மற்றும் விஷால் முதல்முறை  கூட்டணியில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான படம் தாமிரபரணி. ஆக்‌ஷன் மற்றும் ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்து உருவான இந்தப் படம் திரையரங்கில் சக்கைப்போடு போட்டது. இதனைத் தொடர்ந்து இந்த கூட்டணியில் உருவான இரண்டாவது படம் பூஜை. சமீப காலங்களில் ரிரீலிஸ் ஆகும் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.


தனுஷ் நடித்த 3 , சூர்யா நடித்த வாரணம் ஆயிரம், விக்ரமின் சாமி, சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா  , கமலின் வேட்டையாடு விளையாடு , பார்த்திபனின் அழகி ஆகிய படங்கள் ரீரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.


விஜய் ரூட்டில் விஷால்


 வித்தியாசமாக எதையாவது செய்து தினமும் வைராகி வருகிறார் நடிகர் விஷால் . அதிரடியாக கடைகளில் சென்று திருட்டு டிவிடிகளை பிடிப்பது , சாப்பிடுவதற்கு முன் மும்மத கடவுளையும் வழிபடுவது , துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் மூலம் இயக்குநராக களமிறங்குவது, ரெட் ஜெயண்ட் மூவீஸை விமர்சிப்பது என தலைப்புச் செய்திகளில் எப்படியாவது ஒரு இடம் பிடித்து விடுகிறார். 


சமீப காலங்களில் நடிகர் விஷாலில் செயல்பாடுகள் எல்லாம் விஜய்யை பின்பற்றி இருப்பதாக சமூக வலைதளங்களில் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது . விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை அடுத்து நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தார். கடந்த முறை நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததைப்போலவே இந்த முறை மக்களவைத் தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்தார் விஷால்.


இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் நடித்துள்ள கில்லி படம் திரையரங்கில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகிறது. உலகம் முழுவதும் வெளியாகிய முதல் நாளில் 10 கோடிகளை கில்லி படம் வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டு வெளியான அயலான் மற்றும் லால் சலாம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களை விட அதிக வசூலை கில்லி எடுத்து சாதனை படைத்துள்ளது.


இப்படியான நிலையில் நடிகர் விஷாலும் தனது தாமிரபரணி படத்தை ரீரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது அவர் மீதான விமர்சனங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.