சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவந்த சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவுக்கு வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை முதல் படப்பிடிப்பு தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது. கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பாக எஸ் லக்ஷ்மணன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
முதல் பாகத்தைப் போலவே பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக இன்னும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது சர்தார் 2. சமீபத்தில் நடிகர் கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த படத்தின் முன்னோட்டம் பரவலாக கவனமீர்த்தது. இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிலீஸ் தேதி கிடைக்காததால் படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
படப்பிடிப்பி ஏற்பட்ட விபத்து
சர்தார் 2 படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மேன் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டது.
கைதி 2 க்கு தயாரான கார்த்தி
சர்தார் 2 படத்தைத் தொடர்ந்து கார்த்தி அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜின் கைதி 2 படத்தில் நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள கூலி படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து கைதி 2 படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. கார்த்தி லோகேஷ் கூட்டணியில் வெளியான கைதி படம் எல்.சி.யு வின் தொடக்கமாக அமைந்தது. அந்த வகையில் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸில் உருவாக இருக்கும் கைதி 2 படம் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்களில் ஒன்று.