பிரபல நடிகையும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான குஷ்பு உடல்நலம்பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, குஷ்பூ உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், குஷ்பு உடல்நலன் தேறி வீடு திரும்பியுள்ளார்.
இது தொடர்பாக குஷ்பு தன்னுடைய இன்ஸ்டாகிரம் பதிவில்,” மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிவிட்டேன். இருப்பினும், நன்றாக ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். ஒரு வாரத்திற்கு பயணம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். உங்களுடைய அன்பை பெற்றதில் மகிழ்கிறேன். நன்றி.” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி:
”நான் சொன்னது போல், காய்ச்சல் மோசமானது. அது என்னைப் பாதித்துவிட்டது. அதிக காய்ச்சல், உடல் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றைக் தந்தது. அதிர்ஷ்டவசமாக, நல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். உங்கள் உடல்நலன் தோய்வடையும் போது தயவு செய்து அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள். மீட்புக்கான பாதையில் இருக்கிறேன், ஆனால் நீண்ட தூரம் செல்ல வேண்டும்” என குஷ்பு பதிவிட்டு அதோடு மருத்துவமனை படுக்கையில் மிகவும் சோர்வான நிலையில் ஓய்வு எடுப்பதை போன்ற புகைப்படங்களையும் இணைத்து இந்தச் செய்தியை பகிர்ந்திருந்தார்.
இதைகண்ட அவரது ரசிகர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள், குஷ்பு விரைவில் குணமடைய வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். 53 வயதான குஷ்பு தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். அதோடு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக கடந்த பிப்ரவரி மாதம் அவர் நியமிக்கப்பட்டார். இதனிடையே, தனது AVNI சினிமாக்ஸ் பேனரின் கீழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வருகிறார்.
திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்பு, கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதைத்தொடர்ந்து, வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான, வாரிசு திரைப்படத்திலும் குஷ்பு நடித்து இருந்தார். ஆனால், படம் வெளியாகும்போது அவரது காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் தான், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். உடல்நலனில் அக்கறையுடன் இருங்கள் என ரசிகர்கள் குஷ்புவின் பதிவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க..
Idly: இனிமே வித விதமா இட்லி செஞ்சு அசத்துங்க..! எப்படி செய்வது?