மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 


வரவேற்பை பெற்ற மார்க் ஆண்டனி படம்


த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இவரின் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, செல்வராகவன், ஒய்.ஜி.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நேற்று (செப்டம்பர் 15) உலகமெங்கும் வெளியானது.


ஏற்கனவே மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், படமும் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளதாக விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. 1980 மற்றும் 1990 களில் பிரபலமான பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்தது தொடங்கி  மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவை ரீ-கிரியேட் செய்தது வரை ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது மார்க் ஆண்டனி படம். இப்படம் முதல்நாள் பாக்ஸ் ஆபீஸில் ரூ.7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


வீடியோ வெளியிட்ட விஷால் 


இந்நிலையில் மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் வணக்கம். மார்க் ஆண்டனி படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. இந்த பதிவை வெளியிடுவது எனது கடமை என தோன்றுகிறது. எல்லோருடைய உழைப்பை தாண்டி பூமியில் இருக்கும் இந்த தெய்வங்கள் (ரசிகர்கள்), மேலே இருக்க தெய்வங்கள் ஆசீர்வாதம் இல்லாமல் எந்த படமும் ஜெயிச்சதும் கிடையாது. மார்க் ஆண்டனி படம் பிளாக்பஸ்டர் என்ற வார்த்தையை கேட்கும்போது, நடித்த எல்லோரையும் பாராட்டும் போதும், தியேட்டருக்கு வந்து நீங்க ஆதரிச்சதும் சந்தோசமா இருக்குது.






நீங்க கொடுத்த காசுக்கு மகிழ்ச்சியாக படம் பார்த்துருப்பீங்க என நம்புறேன். வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் அனைவரும் மனதார பாராட்டியுள்ளனர். தமிழ்நாடு மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை கண்டிப்பாக மனதில் வைத்துக் கொண்டு அடுத்தடுத்து உழைச்சி நல்ல  படங்கள் கொடுப்பேன். எனக்காக கார்த்தி, வெங்கட் பிரபு, சிம்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட அனைவரும் சமூக வலைத்தளங்களில் படத்தை பற்றி பதிவு வெளியிட்டு பாராட்டியுள்ளது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குது.


ஒன்றரை வருட உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. இன்னைக்கு உங்களால நான் நிம்மதியா தூங்குவேன். கண்டிப்பா நான் சொன்னமாதிரி மார்க் ஆண்டனி படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.1, உங்கள் சார்பாக விவசாயிகளுக்கு கொடுப்பேன்” என விஷால் கூறியுள்ளார். 




மேலும் படிக்க: Marimuthu: எதிர்நீச்சல் ஆதிகுணசேகரனாக மாரிமுத்து நடிக்க காரணம் இவங்கதானா? : ஆச்சரியத்தில் ரசிகர்கள்..