நடிகர் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள மார்க் ஆண்டனி படம் நேற்று (செப்டம்பர் 15) உலகமெங்கும் தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, சுனில் வர்மா, ஒய்.ஜி.மகேந்திரன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதையெல்லாம் மிஞ்சும் வகையில் மார்க் ஆண்டனி படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது. 


காரணம் போன் மூலம் டைம் டிராவல் செய்யும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டுள்ளதால் படத்தில் 80களில் நடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதில் அன்றைய காலக்கட்டத்தில் தனது நடிப்பு, நடனத்தால் ரசிகர்களை கவர்ந்த சில்க் ஸ்மிதாவின் கேரக்டர் இடம் பெற்றுள்ளது. AI தொழில்நுட்பத்தில் அவரது காட்சி படமாக்கப்பட்டிருக்கலாம் என நினைத்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் சில்க் ஸ்மிதா போல இருக்கும் விஷ்ணு பிரியா தான் நடித்துள்ளார் என தெரிய வந்தது. 


தியேட்டரில் பிளாஸ்பேக் காட்சிகள், சில்க் ஸ்மிதா தொடர்பான காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. படத்தை பொறுத்தவரை முதல் பாதி கதை மெதுவாகவே செல்லும் நிலையில் இரண்டாம் பாதி கலகலப்பாக செல்வதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நடிகர் விஷாலை விட எஸ்.ஜே.சூர்யா சிறப்பாக நடித்துள்ளார் என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர். 


ஏற்கனவே இதற்கு முன்னால் தோல்விகளால் துவண்டு கிடந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் விஷாலுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக மார்க் ஆண்டனி அமைந்துள்ளது. இதனால் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தின்  முதல் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி sacnilk இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, இப்படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.6.50 கோடி வசூல் செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் மார்க் ஆண்டனி படம் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




மேலும் படிக்க: Mark Antony Review: விஷாலை ஓரம் கட்டிய எஸ்.ஜே.சூர்யா.. கொண்டாட வைத்ததா “மார்க் ஆண்டனி” படம்?.. முழு விமர்சனம் இதோ..!