5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் நான்காவது போட்டி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் வெறும் 83 பந்துகளில் 174 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸில் இவரது பேட்டிங்கில் இருந்து 13 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்ஸர்கள் வந்தது. இந்தநிலையில், தென்னாப்பிரிக்கா அணி தனது பெயரில் பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 57 பந்துகளில் சதம் அடித்த கிளாசன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆனார். இதற்கு முன்னதாக விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 52 பந்துகளில் சதம் அடித்தார். தென்னாப்பிரிக்காவுக்காக அதிவேகமாக சதம் அடித்த நான்காவது பேட்ஸ்மேன் கிளாசன் ஆவார். டி வில்லியர்ஸ் (31 பந்துகள்), மார்க் பவுச்சர் (44 பந்துகள்), டி வில்லியர்ஸ் (52 பந்துகள்) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சாதனை:
தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டியில் 7வது முறையாக 400 ரன்களை கடந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே அதிகபட்சமாகும். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்காவைத் தவிர வேறு எந்த அணியாலும் 400 ரன்களை 7 முறை கடந்தது கிடையாது.
போட்டி சுருக்கம்:
முதலில் பேட்டிங் செய்ய வந்த தென்னாப்பிரிக்க அணி சிறப்பான தொடக்கத்தை பெற்று கெத்து காட்டியது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குயின்டன் டி காக் மற்றும் ரெசா ஹென்ரிக்ஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 64 ரன்கள் சேர்த்தனர். குயின்டன் டி காக் 64 பந்துகளில் 45 ரன்களும், ரெசா ஹென்ரிக்ஸ் 34 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினர். வான் டர் டுசென் 65 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அவுட்டாக, இதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் இடையே ஐந்தாவது விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்தது. கடைசி பந்தில் ஹென்ரிச் கிளாசன் 83 பந்துகளில் 174 ரன்கள் குவித்து அவுட்டானார். இதன் காரணமாக, தென்னாப்பிரிக்க அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா அணி தோல்வி:
417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பிரமாண்ட இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்குள்4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்கள் ஒருபுறம் கட கடவென கொட்டினாலும், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அதிரடியாக விளையாடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேரி, 99 ரன்களில் யாரும் எதிர்பார்க்காத வேளையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து எந்த வீரரும் அரைசதம் கூட அடிக்காமல் இருந்ததால் ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 252 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி20 தொடரை ஆஸ்திரேலிய கைப்பற்றிய நிலையில், முதல் 2 ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 3வது மற்றும் 4வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில் 2-2 என்று சமனானது. தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது.