மார்க் ஆண்டனி பட பாடல் படப்பிடிப்பில் தனக்குள் சாமியின் அருள் வந்ததாக நடிகர் விஷால் சொன்ன தகவல் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 


எதிர்பார்ப்பு எகிறியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் 


இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில் வர்மா, நடிகை ரித்து வர்மா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள மார்க் ஆண்டனி படம்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று யூட்யூப் தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் மார்க் ஆண்டனி படத்தில் இருந்து ‘கருப்பண சாமி’ பாடல் வெளியானது. 


இதன் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, ‘ மார்க் ஆண்டனி படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் மக்கள் கொடுத்திருக்காங்க. இந்த பாட்டுல அவர் கொடுத்திருக்கிற  எனர்ஜி மிகப்பெரியது. இதனை படம் பிடிக்கும்போது நிறைய தடங்கல் ஏற்பட்டுச்சு. அப்போ, சாமிக்கு ஏதேனும் பிரார்த்தனை செய்யலாம் என விஷால் சொன்னார். அவர் சொன்னதை கேட்டு நடந்ததால் பாடலை படம் பிடிக்க முடிந்தது. அது சண்டைக்காட்சியும், நடனமும் கலந்த பாட்டு. அப்போது விஷாலுக்குள் உண்மையாகவே சாமி வந்தது போல சில செயல்களை செய்தார். அது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. நிச்சயம் தியேட்டரில் படம் பார்க்கும் உங்களுக்கும் அந்த உணர்வை ஏற்படுத்தும்’ என தெரிவித்தார். 


சாமியாடிய விஷால்


இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் பேசினார். அப்போது, “பொதுவா ஒரு பாடல் வெளியீடு நிகழ்ச்சி என்றால் தியேட்டரிலே அல்லது ஹோட்டலிலோ நடத்துவார்கள். இந்த பாடல் காட்சி வெளியீடும்போது நம்ம ஊர்ல 48 அடி உயர அய்யனார் சிலை இருக்கு. அங்க வச்சிரலாம் என சொன்னாரு. நானும் சரி என சொன்னேன். இந்த பாடல் காட்சி படமாக்கப்படும்போது சிலை முன்பு சாமியின் சக்தி வந்து 40 நடனக்கலைஞர்கள் நடனம் ஆடுவார்கள். அந்த சக்தி எனக்குள்ளே வருவது மாதிரியும், அதன்பிறகு சண்டை காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் 500 பேர் போய் ஷூட்டிங் சென்றால் மழை, இரண்டாவது நாள் போய் நின்றால் மறுபடியும் மழை பெய்தது. 


பின்னர் மேனேஜரை அழைத்து அய்யானாருக்கு பூஜை போட்ட பிறகு, மழை நின்றது. இந்த ஷூட்டிங்கின் போது, நான் சாப்பிட்டு வரும்போது என்னோட உதவியாளர் கையில் முடி வைத்திருந்தார். என்னப்பா என கேட்டேன். இல்ல அண்ணே, சாப்பிடும்போது சோற்றில் இவ்வளவு முடி இருந்ததாக கூறினார். நான் உடனே போய் ஷூட்டிங் ஸ்பாட்ல அங்க ஸ்டண்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர் இருந்தாங்க. எனக்கு என்னன்னு தெரியல, மைண்ட்ல ஏதோ ஓடிட்டு இருந்துச்சு. 


உடனே சமையல்காரரை அழைத்து, ‘நீ எனக்கு மட்டும் தான் நல்ல சாப்பாடு போடுறீயா? இல்லை, எல்லோருக்கும் சரிசமமா சாப்பாடு போடூறியா? என கேட்டு விட்டு,  எல்லோருக்கும் சரிசமமா போடணும்ன்னு நான் சொன்ன அப்புறமும் நீ அலட்சியமா செயல்படுறேன்னு சொன்னேன்’. அடுத்த 5 நிமிடம் என்ன நடந்ததுன்னு தெரியல. 


ஒரு கையை இயக்குநர் ஆதிக்கும், இன்னொரு கையை திலீப் மாஸ்டரும் பிடித்து உடலை ஒருமுறை குலுக்கினார்கள். என்னோட கண் சிவந்து இருக்கு, தலைவலி வேற ஏற்பட்டுச்சு, தூரத்துல ஒருத்தன் ஓடிட்டு இருக்கான், நான் என்ன நடந்துச்சுன்னு கேட்டா, ஷூட்டிங் போலாம்ன்னு ஆதிக் சொல்றான். பின்னாடி திரும்பி பார்த்தா டான்ஸ் ஆட வந்த பொண்ணுங்க மிரண்டு போய் நிக்குறாங்க. அப்புறம் தான் சொன்னாங்க, ‘நான் நானாக இல்லை’ என சொன்னார்கள். அதனால் தான் அய்யனார் சிலை முன்னாடி இந்த நிகழ்ச்சியை வச்சோம்” என விஷால் தெரிவித்தார்.  




மேலும் படிக்க: Yuvan Shankar Raja: ‘இசை நிகழ்ச்சியில் குளறுபடி’ .. ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது சரியே.. கைகொடுத்து களத்தில் இறங்கிய யுவன்ஷங்கர் ராஜா..