தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக தலைமைச்செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.


மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பருவகால மழை முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கும் தண்ணீரிலிருந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகிறது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதியிலும் இந்த பிரச்சனை உள்ளது.


கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் ரக்‌ஷன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதார துறை தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்பாக தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டு வருகிறது. 


காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. ”தேங்கி நிற்கும் நீரின் மூலமே கொசு உற்பத்தி அதிகமாகி, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர், காய்ச்சல் வந்துவிட்டால், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது” எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


பள்ளி கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுத்து ஆய்வை மேற்கொண்டு அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்களும் உள்ளாட்சி அமைப்புகளும் பொது சுகாதாரத்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த சூழலில் இன்று தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதார துறை அதிகாரிகளுக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






நேற்றைய தினம் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தண்ணீரில் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில் எப்படி தண்ணீரை சேகரித்து வைக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் டெங்குவால் உயிரிழந்த 4 வயது சிறுவனின் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தார். 


ஜூலை மாதம் கேரளா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாக இருந்த நிலையில், எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏடிஸ் கொசு கடிப்பதால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது . மேலும் இது  தலைவலி, தசைவலி, மூட்டு வலி, குமட்டல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை கொசுக்கடிக்காமல் இருக்க முழுக்கை, முழுக்கால் ஆடைகள் அணிவது, கொசு விரட்டியை பயன்படுத்துவது போன்ற விஷயங்களை உறுதி செய்ய வேண்டும். 


பாஜக சார்பில் நடந்த போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 800 பேர் மீது வழக்குப்பதிவு