மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது விமர்சனம் எழுந்த நிலையில் அவருக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். 


மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி 


கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடப்பதாக இருந்து மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியே அன்றைய தினம் நடந்தது. இம்முறை முன்னேற்பாடுகள் பலமாக செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில்,  ஆர்வமுடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.  


காரணம், அடிப்படை வசதிகள் தொடங்கி பார்க்கிங் கட்டணம், அளவுக்கதிகமாக டிக்கெட் விற்பனை செய்தது, ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியாமல் போனது, மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்தை சரி செய்ய தவறியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ஏ.ஆர்.ரஹ்மான் மீது வைக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் முழுக்க ‘இது ஒரு மோசமான இசை நிகழ்ச்சி’ என தெரிவிக்கப்பட்டதால் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த ACTC events நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியது. 


வருத்தப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான்


 இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்ட பதிவில், “இந்த நேரத்தில் அனைவரும் விழித்துக்கொள்ள நான் பலி ஆடு ஆகிறேன். சென்னையில்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மலர வேண்டும்” உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தனது வருத்தத்தை சொல்லாமல் சொல்லியிருந்தார். மேலும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘ஒரு இசையமைப்பாளராக, ஒரு அற்புதமான நிகழ்ச்சியை வழங்குவதே எனது வேலை. மற்ற ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டுகள் கவனித்து கொள்வார்கள்’ என நினைத்து விட்டேன். தவறுக்கு பொறுப்பேற்று கொள்கிறேன் எனவும் கூறியிருந்தார். 


சப்போர்ட் செய்த யுவன் 


இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சப்போர்ட் செய்யும் வண்ணம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு பெரிய நிகழ்வை ஒழுங்காக நடத்துவது என்பது அடிப்படையில் மிகவும் சிக்கலான பணியாகும். தேவையான உபகரணங்களை ஏற்றி இறக்குவது, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, போக்குவரத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல சவால்களை அதில் இருக்கும். மேலும் இதுபோன்ற நிகழ்வுகளில் கூட்டநெரிசல் போன்ற இன்னல்கள் துரதிர்ஷ்டவசமாக ஏற்படுவது உண்டு. இதற்கு நிர்வாகத் தவறுகள் காரணமாக இருந்திருக்கிறது. அதேசமயம் நல்ல நோக்கத்தில் பெரிய அளவில் முன்னேற்பாடுகள் செய்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்துவிடுவது உண்டு. இது எங்கள் இசையை அர்த்தமுள்ளதாக மாற்றும்  ரசிகர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தி விடுகின்றது. 


நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் இந்தச் சம்பவத்தின் காரணங்களைக் கூராய்வு செய்து தவறுகளை சரி செய்ய வேண்டும். மேலும் கலைஞர்களாகிய நாங்கள் மேடையில் இருக்கும்போது எல்லாமே சரியாக நடக்கும் என்றும், ரசிகர்கள் நல்ல முறையில் கவனிக்கப்படுவார்கள் என்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மீது முழு நம்பிக்கை வைக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழலுக்கு ரசிகர்கள் தள்ளப்படுவதைக் காண்பது உண்மையிலேயே வருத்தமம் அளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கலைஞர்களாகிய எங்களை, இன்னும் ஒரு படி அதிகம் சென்று திட்டமிட வேண்டும் என்பதையும் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது.


சக இசையமைப்பாளர் என்ற முறையில், இந்த கடினமான சூழலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன். அவரது ரசிகர்களுக்கு சிறப்பான மறக்க முடியாத இரவாக அமைந்திருக்க வேண்டும். இதிலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டு வரும் காலத்தில் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்’ என யுவன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க: AR Rahman Concert: ‘நானே பலியாடு ஆகிறேன்’ .. இசை நிகழ்ச்சி பிரச்சினை தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை பதிவு..!