தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உலா வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் கலக்கி வருபவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா (Maharaja).


குரங்கு பொம்மை படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மகாராஜா. இந்தப் படத்தின் ட்ரெயிலர் இன்று ரிலீசானது. இந்த ட்ரெயிலர் எப்படி உள்ளது? என்று கீழே காணலாம்.


ட்ரெயிலர் எப்படி?


சென்னையில் உள்ள கே.கே.நகரில் மிகச்சிறிய அளவில் கடை நடத்தி வருபவர் விஜய்சேதுபதி. அவரது பெயர் மகாராஜா. திடீரென காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் மகாராஜா, லட்சுமியை காணவில்லை என்று கூறுகிறார். அதனால், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரி அருள்தாஸிடம் கூறுகிறார். லட்சுமி என்பது விஜய் சேதுபதியின் மனைவியோ, மகளோ, தங்கையோ என்று நாம் நினைக்கும்போது  திருப்பம் வருகிறது.


லட்சுமி என்பது ஒரு நபர் அல்ல என்பதை மட்டும் ட்ரெயிலரில் காட்டுபவர்கள், லட்சுமி என்றால் என்ன? அது பொருளா? அல்லது நபரா? என்ற ஆர்வத்தை நம்முள் விதைக்கின்றனர். அதன் பின்பு, காவல்துறை உயரதிகாரியாக நட்டி வருகிறார்.


மீண்டும் வரும் பாய்ஸ் ஹீரோ:


நீண்ட இடைவெளிக்கு பிறகு பாய்ஸ் படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக நடித்த மணிகண்டன் வருகிறார். அவருக்கு இந்தப் படம் அடுத்தடுத்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்று கருதலாம். ட்ரெயிலரின் தொடக்க காட்சியில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாரதிராஜாவை காட்டுகின்றனர். பாரதிராஜா இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் தந்தையாக வருகிறாரா? அல்லது வேறு உறவாக வருகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.


ட்ரெயிலரில் மிகப்பெரிய சம்பவம் மறைக்கப்பட்டிருப்பதை அருள்தாஸ் சக அதிகாரிகளிடம் பேசுகிறார். ட்ரெயிலரின் இறுதிக்காட்சியில் கையில் அரிவாள், காலில் குத்தப்பட்ட கத்தியுடன் விஜய் சேதுபதி ஆவேசமாக வருவது போல காட்டுகின்றனர். படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுராக் காஷ்யப் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே ட்ரெயிலரில் வருகிறார்.


 



த்ரில்லர் படம்:


குரங்கு பொம்மை என்ற தரமான படத்தை இயக்கிய இயக்குனரின் படைப்பு என்பதால் நிச்சயம் குடும்பங்களுடன் அமர்ந்து ரசிக்கும் அளவிற்கு இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் ட்ரெயிலர் காட்சியை வைத்து பார்க்கும்போது சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கலாம். அபிராமி, மம்தா மோகன்தாஸ், முனீஷ்காந்த், திவ்யபாரதி என்று பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.


விஜய் சேதுபதி ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் டி.ஓ.பி. செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். நித்திலன் சாமிநாதனுடன், ராம் முரளி இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ளனர்.


மேலும் படிக்க: Indian 2 Audio Launch: ரசிகர்களே ரெடியாகுங்க! இந்தியன் 2 ஆடியோ லாஞ்ச் - வெளியானது தேதி!


மேலும் படிக்க: Hit List Review: ஹிட் அடிக்குமா ஹிட் லிஸ்ட்? மகனை நல்ல ஹீரோவாக செதுக்கினாரா இயக்குநர் விக்ரமன்? முழு திரைவிமர்சனம்