லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. 


லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா


இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 5வது படமாக உருவாகியுள்ள லியோ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ், ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் உள்ளிட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. 


இதனிடையே செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இசை வெளியீட்டு விழா நடக்கவிருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிகப்படியான பாஸ்கள் கோரிக்கை எழுந்ததால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதில் அரசியல் அழுத்தம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. இப்படியான நிலையில் லியோ ஆடியோ நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதில் அரசியல் நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


ட்விட்டரில் #LeoAudioLaunch, #WeStandWithLEO உள்ளிட்ட பல ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளது. இதனிடையே விஜய் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய உரைகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


சர்கார் நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசினார்?


அதில், “வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால் வெற்றியடைக்கூடாது என ஒரு கூட்டம் உழைத்து கொண்டிருக்கிறது. அவங்களை நினைச்சா தான் கொஞ்சம் யோசனையா இருக்கு. அது எல்லார் வாழ்க்கையிலும் இருக்கும் இயற்கையான விஷயம் தான். அது எனக்கு மட்டும் என்று சொல்லவில்லை. ஆனால், வாழ்க்கை என்கிற விளையாட்டை பார்த்து விளையாடுங்க.  இது யார் சொன்ன வார்த்தை என தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் பின்பற்றி வருகிறேன். அதாவது, ‘உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னும் இருந்தா..வாழ்க்கை ரொம்ப ஜம்முன்னு இருக்கும்’. இது சொல்றதுக்கு மட்டும் இல்ல. வாழ்க்கையில கொஞ்சம் ஃபாலோ பண்ணுங்க உண்மையிலேயே ஜம்முன்னு தான் இருக்கு. 


தேர்தலில் எல்லாம் போட்டியிட்டு ஜெயிச்சி அதன்பிறகு சர்கார் எல்லாம் அமைப்பாங்க. நாங்க சர்கார் அமைச்சிட்டு தேர்தலில் நிற்க போகிறோம். நான் படத்தை தான் சொல்கிறேன். பிடிச்சிருந்தா படத்துக்கு ஓட்டு போடுங்க. 


அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் பிரசன்னா, ‘படத்துல நீங்க முதலமைச்சராக நடிக்கிறீங்க என சொன்னாங்க, ஒருவேளை நிஜத்துல முதலமைச்சரானால் என்ன செய்வீங்க?’ என கேள்வி கேட்பார். அதற்கு நான் நிஜத்துல முதலமைச்சர் ஆனால் நடிக்க மாட்டேன். உண்மையா இருப்பேன் என விஜய் பதிலளித்திருப்பார். தொடர்ந்து குட்டிக்கதை ஒன்றையும் சொன்னார். 






ஒரு மன்னர் தன்னுடைய பரிவாரங்களுடன் ஒரு ஊரை தாண்டி செல்கிறார். அவருடன் இருந்த சிப்பாய் மன்னருக்கு எலுமிச்சை ஜூஸ் செய்து கொடுக்கிறார். மன்னர் குழுவில் ஒருவர் அந்த கடைத்தெருவில் போய் உப்பு எடுத்துட்டு வாப்பா என சொல்கிறார். இதனைக் கேட்கும் மன்னர், அப்படியெல்லாம் எடுத்துட்டு வரக்கூடாது. அந்த அளவுக்கு என்ன பணமோ அதை கொடுத்து விட்டு வாங்கிட்டு வர வேண்டும் என சொல்கிறார். 


உடனே அந்த சிப்பாய், என்னங்க கொஞ்சமா உப்பு எடுத்துட்டு வர சொல்றது எல்லாம் என்ன பெரிய விஷயமா? என கேட்கிறார். அதற்கு பதில் சொன்ன மன்னர், ‘நீ சொல்ற மாதிரி கொஞ்சம் உப்பு தான். ஆனால் மன்னரான நானே அதை காசு கொடுக்காமல் எடுத்தால் என் பின்னால் வரும் மொத்த பரிவாரங்களும் இந்த ஊரை கொள்ளையடித்து விடும். அது தான் மன்னர்கள்’என தெரிவித்தார். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. 


ஒரு மாநிலத்துல மேல் மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் கீழே இருப்பவர்கள் பயத்துடன் இருப்பார்கள். ஆனால் இறப்பு,பிறப்பு சான்றிதழ் வாங்க கூட பணம் வாங்குறாங்க. ஒரு மன்னர் எவ்வழியோ அவ்வழி தானே குடிமக்களும். தலைவன் சரியா, உறுதியா இருந்தா ஆட்டோமேட்டிக்காக அந்த கட்சி உறுதியா இருக்கும். தலைவனே படுமோசமாக இருந்தால் முடிந்தது கதை. நாம சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.


தருமம், நியாமம் தான் ஜெயிக்கும், எனினும் அது லேட்டா ஜெயிக்கும். புழுக்கம் ஏற்பட்டால் மழை பெய்வது மாதிரி, ரொம்ப நெருக்கடி ஏற்பட்டால் அங்கே தகுதியான மனிதர்களை தானாகவே வருவாங்க. அங்க ஒருத்தன் கிளம்பி வருவான் அடிபட்டு, நொந்து நூலாகி வருவான் பாருங்க அவன் தலைவன் ஆவான். அவனுக்கு கீழே நடக்கும் பாருங்க ஒரு சர்கார்” என தெரிவித்திருந்தார்.  




மேலும் படிக்க: Leo Movie: விஜயின் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து: ஏ.ஆர். ரஹ்மான் காரணமா? மதுரையில் நடந்தது என்ன?