காவிரியில் இருந்து நாளை முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை 3000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.

  


காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இருக்கும் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தண்ணீர் திறந்து விட வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடகா அரசு தரப்பில் தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின் படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாண்டியாவில் கடந்த 23 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


இந்நிலையில் நேற்று காணொலி காட்சி மூலம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. நேற்றைய  கூட்டத்தில் இதற்கு மேல் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 53% மழை பற்றாக்குறை நீடிக்கிறது, இதனால் கர்நாடகாவில் உள்ள 161 தாலுக்காக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அம்மாநில அரசு அறிவித்துள்ளதாக கர்நாடகா அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி மாதாந்திர தண்ணீர் அளவை வழங்கவில்லை. இதனை வழங்க உத்தரவிட வேண்டும். நிலுவையில் உள்ள தண்ணீரை உடனே திறந்து விட வேண்டும். அதன்படி 12,500 கனடி நீரை காவிரியில் தமிழகத்துக்கு திறக்க உத்தரவிட வேண்டும்'' என தமிழ்நாடு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.


ஆனால் அதற்கு கர்நாடகா அரசு தரப்பில் தற்போது கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என கூறப்பட்டது. காரசார விவாதங்களால் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.


கூட்டத்தின் முடிவில் காவிரி ஒழுங்காற்று குழு சார்பில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதில் நாளை முதல் (செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 15  ஆம் தேதி வரை) தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவில் 3000 கனஅடி நீர் கிடைக்கும்படி தண்ணீர் திறக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  இதனால் கர்நாடகா அரசு கடும் அதிர்ச்சியில் உள்ளது.


இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது எனக் கூறி கர்நாடகா மாநிலம முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் தண்ணீர் பிரச்சனை இல்லை என்றும் அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.


Manipur Issue: அடங்காத வன்முறை.. மணிப்பூரில் மாணவர்கள் கடத்திக் கொலை - பள்ளிகளை மூட அரசு உத்தரவு, இணைய சேவை ரத்து


India - Bharat Row: ஐ.நா கூட்டத்தில் இந்தியாவுக்கு பதில் பாரதம் - மத்திய அமைச்சர் பேசியது என்ன?