விஜயின் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


லியோ திரைப்படம்: 


தமிழ் திரையுலகில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது லியோ. விஜய் - லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் வசூலில் மிகப்பெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் இருந்து, ஏற்கனவே நா ரெடி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி நடைபெறும் என பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.


இசைவெளியீட்டு விழா ரத்து


இந்நிலையில் தான், யாருமே எதிர்பாராத விதமாக லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக, நேற்று இரவு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் வேண்டி ஏராளமான கோரிக்கைகள் எழுவது மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, படம் தொடர்பான அப்டேட்கள் அடுத்தடுத்து வழங்கப்படும். பலர் நினைப்பது போல், இதற்கு அரசியல் அழுத்தமோ அல்லது வேறு காரணங்களோ கிடையாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காரணங்களை நம்பலாமா?


விஜய் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு நடைபெறும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி என்பது, அவரது ரசிகர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேடையில் விஜயின் பேச்சைக் கேட்கவும், அவர் சொல்லும் குட்டிக் கதைக்கும் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பு மற்றும் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு மத்தியில், நடைபெற இருந்த லியோ இசை வெளியீட்டு விழாவை காண ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே எதிர்நோக்கி இருந்தது. இந்நிலையில், இசை வெளியீட்டு விழா ரத்தானது, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக அந்த தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ள காரணங்களும் புதியதாக உள்ளன. இதனால், அதனை நம்பலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


ஏ. ஆர். ரஹ்மான் முதல் காரணமா?


லியோ தயாரிப்பு நிறுவனம் கூறிய இரண்டு காரணங்களில் பாதுகாப்பு அம்சம் ஒன்று. அதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது அண்மையில் பெரும் சர்ச்சைகளுடன் நடந்து முடிந்த, ஏ.ஆர். ரஹ்மானின் இசைநிகழ்ச்சி தான். அதில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால், பொதுமக்கள் பலரும் டிக்கெட் இருந்தும் உள்ளே செல்ல முடியவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்ததுடன், கூட்ட நெரிசலில் பெண்களிடம் சிலர் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயருக்கு பெரும் களங்கம் ஏற்பட்டது. 


மதுரையில் ரத்து செய்யப்பட்ட விழா:


பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் மதுரையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம், ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். ஆனால், எதிர்பார்த்ததை விட அங்கு அதிகப்படியான கூட்டம் கூடிவிட்டது. இதனால், நெரிசலில் சிக்கி சிலர் மயங்கி விழுந்தனர். அதேநேரம், கட்டுக்கடங்காத கூட்டத்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை தகவல் தந்துள்ளது. இதனால், நிகழ்ச்சி தொடங்கிய அரை மணி நேரத்திலேயெ அது முடித்துக்கொள்ளப்பட்டு, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 


லியோவிற்கு என்ன பிரச்னை?


மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளுமே தமிழ்நாட்டில், அண்மையில் எதிர்மறையாக அதிகம் பேசப்பட்டவை ஆகும். இந்த சூழலில் விஜயின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவது, அதுவும் சென்னையில் நடத்துவது என்பது அப்படத்திற்கே மோசமான விளைவை ஏற்படுத்தலாம் என்று கருதி தான், படக்குழு இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளது. விஜய் படங்களின் இசைவெளியீட்டு விழாவை காண வழக்கமாகவே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவது வழக்கம். லியோ நிகழ்ச்சியிலும் அதனை எதிர்பார்க்கலாம். ஒருவேளை அந்த நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால், படத்தின் மீது எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டு  வணிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான், படக்குழு இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளது என்று பேசப்படுகிறது.   


பாஸ் விவகாரம் என்ன?


நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் 6000 பேர் வரை பங்கேற்கலாம். ஆனால், லியோ இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட்டுகளில் சுமார் 5000 ஆயிரம் டிக்கெட்டுகள் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுக்கு மட்டும் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது. மீதமுள்ள டிக்கெட்டுகள் மட்டுமே படக்குழுவினருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் குவிய தொடங்கியுள்ளது. அப்படி கூடுதல் டிக்கெட்டுகளை வழங்கினால் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி மற்றும் மதுரை ஹாப்பி ஸ்ட்ரீட்  போன்று பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக படக்குழு கருதியுள்ளது. இதன் காரணமாகவும், படத்தின் வணிகத்தை கருத்தில் கொண்டும் தான், இசைவெளியிட்டு விழாவை லியோ படக்குழு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.