Fire Accident: ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வடக்கு ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள அல்ஹம்தானியா மாவட்டத்தில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த திருமண நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் பட்டாசு வெடித்தும், விருந்து அளித்தும் கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது, தான்,  திருமண நிகழ்ச்சியில் திடீரென தீ பற்றியது. இந்த தீ மலமலவென பரவி திருமண மண்டபம் முழுவதும் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருந்தது.  இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் இறங்கினர். பின்னர், அங்கிருந்து 100 பேரின் உடல்களை சடலமாக மீட்டனர்.






மேலும், விபத்தில் படுகாயமடைந்த 150க்கும் மேற்பட்டோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், மணமகனும், மணமகளும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தலைநகரான மொசூலுக்கு கிழக்கே உள்ள நகரமான ஹம்தானியாவில் உள்ள பிரதான மருத்துவமனையில் இரத்த தானம் செய்ய டஜன் கணக்கான மக்கள் வந்துள்ளனர். இதற்கிடையில், சம்பவ நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி தெரியவில்லை.  இருப்பினும், தீ விபத்தல் பட்டாசு வெடிக்கப்பட்டது தான் காரணம் என்று உள்ளூர் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இந்த சம்பவம் துரதிர்ஷடவசமானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவிக்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.