ப்ரெண்ட்ஸ் , காவலன் படங்களின்  இயக்குநர் சித்திக்கின் மறைவுக்கு நடிகர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தாகவும், நேரில் செல்ல முடியாததற்கு வருந்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் விஜய்யின் கரியரில் முக்கிய வெற்றிப் படங்களாக அமைந்த திரைப்படங்கள், ப்ரெண்ட்ஸ், காவலன். இந்தப் படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குநர் சித்திக் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.


இவரது மறைவால் மலையாள மற்றும் தமிழ் திரையுலகங்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில்,  லால், மம்மூட்டி, துல்கர் சல்மான், ஃபஹத் ஃபாசில் என மலையாளத் திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் நேரில் சென்று சந்தித்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


இந்நிலையில், அவர் இயக்கத்தில் வெளியான ஃப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவால் நேரில் சென்று விசாரிக்க முடியவில்லை


தமிழ் திரையுலகில் வெளியான காலம் தொடங்கி இன்றும் வயிறு குலுங்க ஆடியன்ஸை சிரிக்க வைத்து ரசிக்க வைக்கும் திரைப்படம் இயக்குநர் சித்திக்கின் ஃப்ரெண்ட்ஸ். 


நடிகர்கள் விஜய், சூர்யா இருவருக்கும் இவர்களது கரியரின் முக்கியமான தருணத்தில் முக்கியமான படமாக ஃப்ரெண்ட்ஸ் அமைந்த நிலையில், அன்று தொடங்கி இன்றைய மீம்ஸ் யுகம் வரை இப்படம் தொடர்ந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்நிலையில் சித்திக் மறைவை அடுத்து அடுத்த நாள் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருந்ததுடன், அதே வாரத்தில் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


இந்நிலையில் நடிகர் விஜய் சித்திக்கின் மறைவுக்கு நேரில் சென்றோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ இரங்கல் தெரிவிக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில், நடிகர் விஜய் சித்திக் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சித்திக் மறைவின்போது தான் வெளியூரில் இருந்தாகவும் அதனால் தன்னால் வர முடியவில்லை என்று விஜய் வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ப்ரெண்ட்ஸ் தவிர நடிகர் விஜயகாந்தின் எங்கள் அண்ணா, விஜய்யின் காவலன் படங்களும் ரசிகர்களை தொடர்ந்து சிரிக்க வைத்து வருகின்றன.  மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தின்  காண்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரம் உலக அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Mari Selvaraj: “உண்மையை கேட்ககூடிய காதுகளை நான் தேடிகொண்டே இருப்பேன்” - மாமன்னன் 50வது நாளில் மாரி செல்வராஜ்


LEO Update: ’லியோ’விலும் அடியெடுத்து வைக்கும் ரோலக்ஸ்.. சாமர்த்தியமாக காய் நகர்த்தும் லோகேஷ்.. எப்படி தெரியுமா?