Mari Selvaraj: பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
இயக்குநர் மாரி செல்வராஜ் என்றாலே நேர்த்தியான கதை, அதற்கேற்ப திரைக்கதை, கூர்மையான காட்சிகள் அதையொட்டிய வசனங்கள் என தனது முதல் படம் முதல் அவரது இயக்கத்தில் வெளிவந்துள்ள மூன்று படங்களிலும் தமிழ் சினிமாவில் சிறந்த கலைப்படைப்பை உருவாக்கக்கூடியவர் என்ற பெயரைப் பெற்றுள்ளவர்.
இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் உதயநிதி, வடிவேலு, லால், பகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம். நேரடியான சமூகக்களம் அதையொட்டியுள்ள அரசியல் களம் என நுணுக்கமான கதைக்களத்தினை படமாக்கி வெளியிடப்பட்டது. மாரி செல்வராஜின் இயக்கத்துக்கு என உள்ள ரசிகர்களைக் கடந்து பொது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கதைக்களம் மட்டும் மிகமோசமாக இல்லை, இன்றைய சமூகமே அப்படித்தான் உள்ளது என்பதை வெளிக்காட்டி திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் வரும் ரத்தினவேல் எனும் கதாப்பாத்திரத்தை சமூக வலைதளங்களில் ஒரு கூட்டம் கொண்டாடியது அதற்கு சாட்சி.
இப்படம் திரையரங்கில் வெளியாகி அதன் பின்னர் ஓடிடியில் வெளியானது. கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி ரிலீசான இந்த படம் நேற்றுடன் அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் 50வது நாள் ஆனதால் படக்குழு இதனை மிகச்சிறப்பாக கொண்டாடியது. மாமன்னன் படத்தின் 50வது நாளில் இப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூகவலைதளப் பக்கமான ட்விட்டரில் “மாமன்னன் 50 வது நாள் பெருந்துயர் வாழ்வுதான் என்றாலும் அதற்குள் அறத்தையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்த அளப்பரிய வெற்றியை சமர்பிக்கிறேன் “உண்மையை கேட்ககூடிய காதுகளை நான் தேடிகொண்டே இருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ட்வீட்டுடன் மாரிசெல்வராஜ் தனது பெற்றோர்களுடன் தனது கையில் ஒரு பன்றிக்குட்டியை வைத்திருப்பது போன்ற ஓவியத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த படம் உதயநிதி நடிக்கும் கடைசி திரைப்படம் என கூறப்பட்டதால், இந்த படத்தின் மீது பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்தது மாமன்னன் திரைப்படம். இப்படத்தில் மிகவும் பாரட்டப்பட்ட நடிப்பு என்றால் அது வடிவேலு மற்றும் பகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பு தான். மேலும் இப்படத்திற்கு ரகுமானின் இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக வடிவேலு குரலில் இடம் பெற்ற பாடலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.