மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படமானது வருகின்ற அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது. ’விக்ரம்’திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படம் LCU-க்கு கீழ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆகஸ்ட் 15ம் தேதி க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூனின் பிறந்தநாள் என்பதால் லியோ படத்தின் அவரது கதாபாத்திரம் குறித்த தகவலை வெளியிட்டு கெத்து காமித்தது.
இந்தநிலையில், 'விக்ரம்' படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் என்ற சக்திவாய்ந்த எதிரி கதாபாத்திரத்தை ‘லியோ’ படத்தில் கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் லோகேஷ் கனகராஜிடம் சமூக வலைதளம் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதையும் லோகேஷ் கனகராஜ் யாருக்கும் தெரியாமல் சாமர்த்தியமாக லியோ படத்தில் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், காட்சியாக இல்லாமல் விஜய்யின் கதாபாத்திரம் சூர்யாவின் கதாபாத்திரத்துடன் தொலைபேசியில் உரையாடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல் உண்மையா என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஒருவேளை லியோ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் இடம்பெற்றிருந்தால் ’நேருக்குநேர்’ ’ப்ரெண்ட்ஸ்’ படத்திற்கு பிறகு விஜயுடன் சூர்யா இணையும் 3வது படமாக இது இருக்கும்.
மேலும், லியோ படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கிடைத்த தகவலின்படி, வருகின்ற செப்டம்பர் 29 அல்லது 30ம் தேதி மதுரையில் ஒரு பிரமாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவை தயாரிப்பாளர் தரப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதேபோல், படத்தின் ப்ரீ - ரிலீஸ் நிகழ்ச்சியை மலேசியா அல்லது துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், காந்தி ஜெயந்தியன்று (அக்டோபர் 2) மாலை 6.07 மணிக்கு லியோவின் டீசர் அல்லது ட்ரெய்லர் வெளியிடப்படலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
தற்போது லியோ படத்தில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது, காஷ்மீர் மாநிலம் மாநிலம் பஹல்காமில் சில நாட்களாக தளபதி விஜய் இல்லாமல் பேட்ச்வொர்க் ஷூட் நடைபெற்று வருவதாக தெரிகிறது. வருகின்ற ஆயுதபூஜை அன்று லியோ படம் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. படத்தில் நடிகர் விஜயை தவிர, ஆக்ஷன் கிங் அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் மிஷ்கின், பாலிவுர் நடிகர் சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி, பாபு ஆண்டனி என பல நட்சத்திர பட்டாளமே உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் இந்த படத்தை தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் பட எடிட்டிங்கும், ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு சண்டைக்காட்சிகளை இயக்கி வருகின்றனர்.