முதல் சந்திப்பிலேயே காதலில் விழுந்த ரஜினியின் சுவாரஸ்ய தகவல் ஜெயிலர் படத்தின் மூலம் வைரலாகி வருகிறது.


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரி குவித்து வருகிறது. ஜெயிலரில் முத்துவேல் பாண்டியனாக வரும் சூப்பர் ஸ்டாரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் நடிக்கும் போது நெல்சனுடன் ரஜினி பேசியதாக சுவாரசிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. 


ஜெயிலர் படத்தின் ரிலீசையொட்டி நடந்த இசை வெளியீட்டு விழாவில், ”படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை பார்த்த நெல்சன் முதலில் என்னுடைய  லவ் ஸ்டோரியை கேட்டார்” என ரஜினி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி- லதாவின் காதல் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. 


அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ரஜினியை கே. பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த ரஜினி, தனது கெட்டப்பை மாற்றி ஹீரோவாக நடிக்க தொடங்கினார். மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி, ஆடுபுலி ஆட்டம், பதினாறு வயதிலேயே, முள்ளும் மலரும், பைரவி, அவள் அப்படித்தான், தப்புத்தாளங்கள், முரட்டுக்காளை, போக்கிரிராஜா, அன்னை ஓர் ஆலயம்,  என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்ததால் ரஜினி மிகப்பெரிய ஹீரோவாக உருவெடுத்தார். 1978 மற்றும் 1979ம் ஆண்டுகளில் மட்டும் 30க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினி நடித்ததால் மிகப்பெரிய நடிகராக இருந்தார்.


இப்படி ரஜினி பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் போது தான் அந்த சம்பவம் நடந்தது. சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்து வந்த லதா தனது உறவினரான ஒய்.ஜி.மகேந்திரனின் உதவியால், கல்லூரியின் சிறப்பு நாளிதழ் ஒன்றிற்காக ரஜினியை பேட்டி எடுக்க சென்றுள்ளார். நேரம் இல்லாத காரணத்தால் 20 நிமிடங்கள் மட்டுமே பேட்டி எடுக்க லதாவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதன்படி 20 நிமிடங்கள் என ரஜினியிடம் தொடங்கிய லதாவின் பேட்டி 2 மணி நேரம் வரை சென்றது. முதன் முதலாக தன்னை பேட்டி எடுத்த கல்லூரி மாணவி மீது ரஜினி காதலில் விழுந்துள்ளர். 




பேட்டி முடிந்ததும், கிளம்பிய லதாவை அழைத்த ரஜினி நேரடியாக விஷயத்துக்கு வந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ரஜினி கூறியதும் அதை கேட்ட லதா அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், மனதில் பட்டதை வெளிப்படையாக சொன்ன ரஜினியின் அந்த குணத்தை பிடித்ததும் லதாவும் கிரீன் சிக்னல் காட்டியுள்ளார். தனது வீட்டில் வந்து பெண் கேட்க சொல்லியுள்ளார். இதையடுத்து இரு குடும்பத்தின் சம்மதத்துடன் லதா- ரஜினி 1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். 






தொடர்ந்து ரஜினி சூப்பர் ஸ்டாராக உச்சத்துக்கு சென்றிருந்தாலும் இருவரது காதலுக்கும் எந்த நிலையில் குறையாமல் தொடர்ந்து கொண்டே உள்ளது. இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். ரஜினியின் இந்த காதல் கதை தற்போது நெல்சனால் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. 






மேலும் படிக்க: Lokesh Kanagaraj: ரூ.1.70 கோடியில் சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்.. இணையத்தில் வைரலாகும் போட்டோ..!