ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதைக்கு பின் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த மீம்கள் சமூக வலைதளங்களில் பரவலாக உலா வருகின்றன.


ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களிடையே இணையதளங்களில் வாக்குவாதம் நிலவி வருகிறது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். சூழல் இப்படி இருக்க நடிகர் விஜய் செய்த விஷயம் படுவைரலாகி வருகிறது. இது குறித்து கலை இயக்குனரும், நடிகருமான கிரண், பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.


"ஜெயிலர் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த அதே இடத்தில் விஜய்யின் வாரிசு படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. அப்போது நான் அவரைப் பார்க்க சென்று இருந்தேன். அவர் என்னைப் பார்த்ததும் முதலில் நலம் விசாரித்தார். பின் ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து பேசினார். அதன்பின், தலைவர் எப்படி இருக்காருனு ரஜினி சார் குறித்து அக்கறையாக கேட்டார். ஏனென்றால் அவர் அப்போது தான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருந்தார். விஜய் சார் கூட ரஜினி சாரை தலைவர் என்று தான் கூப்புடுகிறார்.


மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பின் முதல் நாளில் இயக்குநர் நெல்சனுக்கு காலையில் போன் கால் செய்து எழுப்பி விட்டதே விஜய் சார் தான். சீக்கிரம் போ என நெல்சனிடம் விஜய் சார் கூறியுள்ளார்"  என பேட்டியில் கிரண் பகிர்ந்து கொண்டுள்ளார். 


ரஜினி -விஜய் ரசிகர்களிடையே இணைய மோதல்போக்கு நிலவி வரும் சூழலில், இந்தப் பேட்டி ரசிகர்களை சற்றே ஆற்றுப்படுத்தியுள்ளது.


ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சல் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் அதிகாலை காட்சிகள் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, காலை 9 மணிக்குப் பிறகே தமிழ்நாடு திரையரங்குகளில் முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அங்கு பெரும்பாலான திரையரங்குகளில் காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக‌ அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், பெங்களூருவில் முகுந்தா, பாலாஜி, பூர்ணிமா உள்ளிட்ட தனி திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் பெங்களூருவில் ஜெயிலர் படத்தின் அதிகாலைக் காட்சிகளை பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க:


Supreme Court On Manipur: மணிப்பூர் கலவரம் - 3 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு


Shocking Video: கொட்டும் மழையில் கொடூரம்..! என்.சி.சி மாணவர்களை தடியால் அடித்த சீனியர்...ஷாக் வீடியோ!