Shocking Video: மகாராஷ்டிராவில் என்.சி.சி மாணவர்களை கொட்டும் மழையில் படுக்க வைத்து சீனியர் மாணவர் ஒருவர், தடியால் கொடூரமாக அடித்த சம்பவம் அனைவரையும் அதிரச் செய்துள்ளது.
சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு சமூகத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்று நினைக்கும் அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிப்பருவத்தில் இருந்தே என்சிசியில் சேர்த்து விடுகின்றனர். இதன் மூலம் மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் சமூக பங்களிப்பு அதிகரிக்கிறது.
இந்தியா முழுவதும் ஆர்வத்துடன் வரும் மாணவர்களுக்கென்றெ என்.சி.சி கேம்கள் செயல்பட்டுவருகிறது. இதில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்கள், எதிர்காலத்தில் காவல்துறை, ராணுவம் போன்ற பணிகளுக்கு முயற்சிக்கும்போது இந்த சான்றிதழகள் கருத்தில் கொள்ளப்படும். இப்படி முக்கியதுவமாக கருதப்படும், என்.சி.சி மாணவர்களுக்கு தற்போது ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாக்கப்பட்ட என்.சி.சி மாணவர்கள்:
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் பந்தோத்கர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் எச்.சி.சி மாணவர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இங்கு அணிவகுப்பு பயிற்சியின்போது, சில மாணவர்கள் சரியாக செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்த சீனியர் மாணவர் ஒருவர், 5க்கும் மேற்பட்ட மாணவர்களை தனியே அழைத்து குப்புற படுக்க வைத்து, அவர்களை தடியால் சரமாரியாக அடித்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் வீடியோ:
அதில், என்.சி.சி மாணவர்கள் 5க்கும் மேற்பட்டவர்களை தனியாக அழைத்துள்ளார். அவர்களை குப்புற படுக்க வைத்தார். அங்கு அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும், மண்ணில் என்.சி.சி மாணவர்களை படுக்க வைத்த அவர், தடியை எடுத்து அந்த மாணவர்களின் பின்பகுதியில் கொடூரமாக அடித்துள்ளார். மேலும், குப்புற படுக்கச் சொல்லியும், கைகளை பின்பக்கம் கட்ட சொல்லியும் கண்மூடித்தனமாக அவர்களை தடியால் தாக்கியுள்ளார். இதில் மாணவர்கள் வலியால் துடித்துள்ளனர். அப்போதும் கூட, மாணவர்களை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தார். இதனை மாடியில் நின்ற மற்ற மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர்.
சஸ்பெண்ட்:
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து, சீனியர் மாணவரை சஸ்பெண்ட் செய்து அக்கல்லூரி முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ”என்.சி.சி. மாணவர்களை கொடூரமாக அடித்துள்ளது வருத்தமடைய செய்துள்ளது. இதுபோன்று சக மாணவர்களை தாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்றார்.