நடிகர் கூல் சுரேஷ் தன்னிடம் ஏற்கனவே ஒருமுறை வம்பு பண்ணியதாக தொகுப்பாளினி ஐஸ்வர்யா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 


கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நடிகர் மன்சூர் அலிகான் தயாரித்து நடித்துள்ள ‘சரக்கு’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  ஜெயக்குமார் ஜே என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் வலினா பிரின்ஸ்,பாக்யராஜ்,  நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன் என பலரும் நடித்துள்ளனர். தமிழ்நாட்டை பாடாய்படுத்தும் மதுவின் பாதிப்பை வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 


இந்த படத்தின் நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷூம் பங்கேற்றார். அப்போது மேடையில் பேச வந்த அவர், கழுத்தில் ஒரு மாலை போட்டிருந்த நிலையில், கையில் ஒரு மாலையுடன் வந்தார். அப்போது, ‘எல்லோருக்கும் மன்சூர் அலிகான் அண்ணன் மாலை போட்டிங்க.. நம்மை வித்தியாசமான வார்த்தைகளை கூறி வரவேற்பவருக்கு மாலை போட்டோமா?’ என சொல்லிக் கொண்டே அருகில் நின்ற தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு வலுக்கட்டாயமாக மாலை அணிவித்தார். 


இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக ஊடகத்தினர் மன்சூர் அலிகானிடம் கூல் சுரேஷ் செயலை கண்டித்து வாக்குவாதம் செய்தனர். அவருக்கான தான் மன்னிப்பு கேட்பதாக சொன்ன மன்சூர் அலிகான், கூல் சுரேஷையும் மேடையிலேயே கண்டித்து மன்னிப்பு கேட்க வைத்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. 


இதனைத் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ், நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்பதாக சொன்னார். இதனால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், திரைத்துறையினர் தேவையில்லாமல் கூல் சுரேஷை ப்ரோமோட் செய்ய வேண்டாம் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே நடந்த சம்பவம் தொடர்பாக தொகுப்பாளினி ஐஸ்வர்யா கருத்து தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஐஸ்வர்யா, ‘சரக்கு பட நிகழ்ச்சியில் நடைபெற்ற சம்பவத்தை இப்போது நினைத்தாலும் அதிர்ச்சியாகவே உள்ளது. யாரும் எதிர்பார்க்காத நொடியில்,வலுக்கட்டாயமாக அப்படி நடந்துகிட்டார். பொதுமேடையில் இப்படி நடக்கும்போது என்ன செய்ய முடியும்?. அவருக்கு பளார்ன்னு ஒரு அறை ஏன் கொடுக்கல என்று இப்ப நான் ஃபீல் பண்றேன். கிறுக்குத்தனம் பண்ணுவதில் கூட ஒரு லிமிட் இருக்கு. அது யாரையும் காயப்படுத்தாத மாதிரி இருக்கணும். கூல் சுரேஷ்  இதற்கு முன்னாடியும் ஒரு நிகழ்ச்சியில எங்கிட்ட வம்பு பண்ணியிருக்கார். 


எனக்கு பொதுவாகவே அவரோட நடவடிக்கைகள் பிடிக்காது. மேடையில் கூப்பிடும்போது தன்னை வெறுமென கூல் சுரேஷ் என சொல்லாமல்,  ‘யூ டியூப் சூப்பர் ஸ்டார்’ என்று பட்டம் இருக்கு, அதை சொல்லி கூப்பிட மாட்டிங்களா? என கேட்பார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது மாலையை என் கழுத்துல வேண்டும் என்றே போட்டிருப்பார் என்றே நினைக்கிறேன். இன்னொரு முறை இந்த மாதிரி நடந்தா கண்டிப்பா கன்னத்துல ஒரு அடியாவது கொடுப்பேன். இல்லை என்றால் போலீஸில் புகார் கொடுப்பேன்” என அவர் கூறியுள்ளார். 




மேலும் படிக்க: Cool Suresh: மேடையில் தொகுப்பாளினியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷ்.. மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்..!