மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் மனைவியுடன் வந்து சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன். அவரைக் கண்டதும் செல்பி எடுக்க போட்டி போட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்!

அமரன் திரைப்பட வெற்றி


சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது. மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவான இப்படம் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களுல் ஒன்றாக அமைந்தது. 30 நாட்களுக்கும் மேலாக திரையரங்கில் ஓடி உலகளவில் ரூ 328 கோடி வசூல் ஈட்டியது அமரன். டிசம்பர் 4 ஆம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மேலும் பல பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வரும் சிவகார்த்திகேயன், இன்று மதுரை அழகர்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

 


அழகர்கோயிலில் சாமி தரிசனம்


மதுரை மாவட்டம் மேலூர் அருகே 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்றதுமானது அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் ஆகும். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து செல்லும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் ஆலயத்திற்கு நேரில் வந்தார். இங்குள்ள கள்ளழகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து,  மலை மீதுள்ள ஆறாவது படை வீடான பழமுதிர்ச்சோலை முருகன் திருக்கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். பின் காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி சென்று அங்கும் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கருப்பணசாமி ஆலயத்திற்கு காணிக்கை செலுத்தும் விதமாக அரிவால் வழங்கினார். தொடர்ந்து அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 


சிவகார்த்திகேயனுடன் செல்பி


நடிகர் சிவகார்த்திகேயன் அழகர்கோயிலுக்கு வந்த தகவல் பரவியதை தொடர்ந்து, அவரை கண்டதும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது செல்போன்களில் போட்டி போட்டு அவருடன் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டினர். மேலும் அவருக்கு பாதுகாப்பாக அப்பன் திருப்பதி போலீசார் உடன் நின்று விரைவாக தரிசனம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'அமரன்' திரைப்படம் வெற்றி பெற்று அவருக்கு பாராட்டுகளை குவிந்து வரும் நிலையில் அழகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.