Syria War: சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸ் அருகே உள்ள ராணுவ சிறைச்சாலையை கிளர்ச்சியாளர்கள் திறந்துவிட்டுள்ளனர்.
டமாஸ்கஸில் சிரியா கிளர்ச்சியாளர்கள்
ஹாம்ஸ் நகரை தொடர்ந்து, சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகருக்குள் ஞாயிறன்று காலை கிளர்ச்சியாளர்கள் நுழைந்துள்ளனர். பெரிய எதிர்ப்பு ஏதுமின்றியே அவர்கள் நகரை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. புறநகரில் உள்ள ஒரு பெரிய ராணுவ சிறைச்சாலையான செட்னயா சிறையின் கதவுகள் திறந்து அதிலிருந்த ஆயிரக்கணக்கான கைதிகளை விடுவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவில், “எங்கள் கைதிகளை விடுவித்து, அவர்களின் சங்கிலிகளை விடுவித்து, செட்னாயா சிறையில் அநீதியின் சகாப்தம் முடிவுக்கு வந்ததை அறிவிக்கும் செய்தியை நாங்கள் சிரிய மக்களுடன் கொண்டாடுகிறோம்” என கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய அதிபர்
2011ல் சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து, அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலாக இந்த முன்னேற்றங்கள் அமைந்துள்ளன. இதையடுத்து சிரிய அதிபர் பஷர் அல்-அசாத், நாட்டிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் அதிபர் கனி கடந்த 2021ம் ஆண்டு, தாலிபான்களின் ஆக்கிரமிப்பு காரணமாக நாட்டை விட்டு வெளியேறினார். அதைதொடர்ந்து, இலங்கையில் வெடித்த பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்ச சிங்கபூரில் தஞ்சமடைந்தார். அண்மையில் வங்கதேசத்தில் வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சமடைந்தார். அந்த வரிசையில் தற்போது சிரியா அதிபரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ரஷ்யா சொல்வது என்ன?
மாஸ்கோவின் கூட்டாளியான அதிபர் பஷர் அல்-அசாத்தின் படைகளுக்கு எதிராகப் போராடும் "பயங்கரவாத" கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிரியா சிக்குவதை அனுமதிக்கக் கூடாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார். அதன்பட், "சிரிய அரபுக் குடியரசின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை வலுவாக வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2254ஐ குறிப்பிட்டு இருக்கும் உடன்படிக்கைகளை மீறி நிலங்களை பயங்கரவாதக் குழுவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், துருக்கி விவகாரத்தில், "அரசியல் தீர்வுக்கு" அழைப்பு விடுத்தார். ஆனால், அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் சிரியாவில் உள்ள சூழ்நிலையில் அமெரிக்கா "தலையிடக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். அதன்படி. "சிரியா ஒரு குழப்பம், ஆனால் எங்கள் நண்பர் அல்ல, அமெரிக்காவிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது எங்கள் சண்டை அல்ல. அவர்களே பார்த்துகொள்ளட்டும். அமெரிக்கா இதில் தலையிட வேண்டாம்" என்று டிரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் தெரிவித்துள்ளார்.