ஆதவ் அர்ஜுனா அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது. என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதை தலைமை கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நேற்று முன்னணி தோழர்களுடன் கலந்து பேசினோம். தொடர்பான முடிவு விரைவில் வரும். - தொல் திருமாவளவன் பேட்டி.
மதுரையில் தொல்.திருமாவளவன்
கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது...,” விடுதலை சிறுத்தைகள் மதசார்பற்ற கூட்டணி. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் வி.சி.க இடம் பெற்றுள்ளது. புதிதாக ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவை இல்லை. திமுக கூட்டணி கட்டுப்பாடு இல்லாமல் சிதறடிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள சதி திட்டமாக இருக்கும். அதிமுக, பாஜக அவர்களை நோக்கம் தொடர் வெற்றி பெற்றுள்ளதால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விடாமல் இந்த கூட்டணியில் சீர்குலைக்க வேண்டும், என்பதுதான் நோக்கம். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை கருவியாக பயன்படுத்தலாம் என சிலர் முயற்சிக்கிறார்கள்.
அரசியலாக்குவார்கள்
கூட்டணிக் கட்சியில் எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை, அதற்கான சூழ்நிலையும் இல்லை. திமுக அழுத்தம் கொடுத்திருக்கிறது என்று சொன்னால் ஆரம்பத்திலேயே அதில் பங்கேற்க மாட்டேன், என சொல்லி இருப்பேன். அது ஒரு யூகங்களாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டது. நான் சுயமாக எடுத்த முடிவு. விக்கிரவாண்டி மாநாட்டிற்கு பிறகு விஜய் திமுக அரசை முதன்மையான எதிரிகள் என்று வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் நானும், விஜயும் அரசியல் பேசாமல் நூல் வெளியீட்டு விழாவில் இருந்தால் கூட அதை அரசியலாக்குவார்கள். இதற்கான பலர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தீனி போட நான் விரும்பவில்லை. விஜய் மீது எந்த ஒரு சங்கடமும் இல்லை. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. சூதாட்டம் ஆட விரும்புகிறவர்கள், தமிழக அரசியல் களத்தில் கலவரத்தை உருவாக்குவார்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.
உயர்நிலைக் குழுவில் விவாதிக்கும்
துணை பொதுச் செயலாளர்கள் பத்து பேரில் ஒருவர் ஆதவ்அர்ஜுனா. அப்படி ஒருவர் கட்சி கட்டுப்பாட்டை மீறும் போது கட்சிக்கு ஊறு விளைவிக்கிற வகையில் செயல்படும்போது தலைவர், பொதுச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதிக்க வேண்டும் என்பது நடைமுறை. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாதவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை என்று வருகிற போது, உயர்நிலைக் குழு கவனத்திற்கு சென்று அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு முகாந்திரமானவை என்பதை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை ஒரு நடவடிக்கையாக கொண்டுள்ளோம்.
முடிவு விரைவில் வரும்
இது முழுமையான அரசியல் கட்சி ஆவதற்கு வேளச்சேரி தீர்மானம் என்பதை நாங்கள் நிறைவேற்றினோம். தலித் அல்லாதவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தலைவரின் கடமை. ஆகவே ஆதவ் அர்ஜுனின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது. என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதை தலைமை கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நேற்று முன்னணி தோழர்களுடன் கலந்து பேசினோம். தொடர்பான முடிவு விரைவில் வரும். என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை அதற்கான சூழல் இல்லை” என்றார்.