தன்னுடைய அப்பாவின் பங்கு என்னுடைய காமெடி காட்சிகளில் எப்படி எதிரொலிக்கும் என நடிகர் சந்தானம் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம், தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்.அடுத்ததாக அவர் நடிப்பில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் நாளை (ஜூலை 28) தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின்  ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


இதுதொடர்பான நேர்காணல் ஒன்றில், நடிகர் சந்தானம் நிறைய இடங்களில் தன்னுடைய நகைச்சுவை உணர்வுக்கு தந்தை தான் காரணம் என சொல்லியுள்ளார். அதுபற்றி நேர்காணல் ஒன்றில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘எங்க அப்பா எப்பவும் ஜாலியாக இருக்கிற கேரக்டர். ஏதாவது கவுண்ட்டர் டயலாக் சொல்லிகிட்டே இருப்பார். அவர் எம்ஜிஆர் மற்றும் தங்கவேலுவின் தீவிர ரசிகராக இருந்தார். அவங்களோட படங்களை எனக்கு போட்டு காட்டுவார். 


அதே சமயம் சின்ன வயசிலேயே என்னை ஆன்மீக பாதையில கொண்டு போய்ட்டார். என்னுடைய ஆன்மீக பாதை வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி மூலமாக ஆரம்பமாச்சு. எனக்கு படிப்பு, பணத்தை விட ஆன்மீகத்தைத்தான் அதிகமாக கொடுக்கணும்னு அப்பா நினைத்தார். அதுதான் நான் சந்தோஷமாக இருக்க காரணம் என நினைக்கிறேன். 


நான் ஹீரோவா அறிமுகமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்துல என்னை அடிக்கிற மாதிரி காட்சிகள் இருக்கும். அதனைப் பார்த்து விட்டு, ‘என்னடா அடி வாங்குற.. தலைவர் எம்ஜிஆர் மாதிரி அடிச்சி பறக்க விடணும்’ என சொன்னார். என்னுடைய படங்களில் காமெடி காட்சிகளில் இடம் பெறும் வசனம் அப்பாகிட்ட இருந்து எடுத்துக்கிட்டது தான். நான் எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பையன், ஆனால் என் சொந்தகாரங்களுக்கு நிறைய குழந்தைகள் உள்ளனர். 


ஒருமுறை என்னை பார்த்து கோவத்துல, ‘ஊர்ல 10,15 புள்ள வச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோசமா இருக்கான். ஒன்னே ஒன்னு வச்சிகிட்டு நான் படுற அவஸ்தை இருக்குதே’ என சொல்லிட்டார். அது தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில், “ஊருக்குள்ள 10,15 ப்ரண்ட் வச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு ப்ரண்ட் வச்சிகிட்டு நான் படுற பாடு இருக்குதே” என மாற்றிக் கொண்டேன். அப்பா எனக்கு கொடுத்த மிகப்பெரிய சொத்தே ஆன்மிகம் தான். என்னை வழிநடத்துவம் அதுதான்' என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். 


இதையும் படிங்க..


DD Returns Review: சிரிப்பு சரவெடி.. பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!


LGM Movie Review: தோனியின் முதல் தயாரிப்பு.. எல்.ஜி.எம் படம் சூப்பரா? ... சுமாரா? .. முழு விமர்சனம் இதோ..!