ஆம்ஸ்ட்ராங்
பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு இரு சக்கரங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இந்த கோர சம்பவத்தை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு என்பவர் உட்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன்பு போலீசில் சரணடைந்துள்ளனர். சரணடைந்த நபர்கள் தான் உண்மையான குற்றவாளிகளா என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
ஆம்ஸ்ட்ராங்கின் உடம் பெரம்பூரில் உள்ள பந்தர் கார்டன் பள்ளியில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள். திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்வேறு தரப்பினர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சாய் தீனா ஆம்ஸ்ட்ராங் குறித்து பேசியுள்ளார்.
பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்
பத்திரிகையாளர்களிடம் பேசிய சாய் தீனா ‘ எங்களது மொத்த அதிகாரமும் போய்விட்டது. பூர்வகுடி மக்களின் எழுச்சி நாயகன் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். இது எங்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரிய இழப்பு. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. எங்கள் அண்ணன் இருந்த வரைக்கும் எங்களுக்கு எல்லாமே கிடைத்தது . தற்போது ஒரு நூறு ஆண்டுகள் பின்னால் போனது போல் பயம் வந்திருக்கிறது. முதலில் எங்களுக்கு சாதியே கிடையாது. நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள் . இனம் , மதம் , சாதி , பேதம் எதுவுமே இல்லை. எங்களிடம் இருப்பது ஒன்றே ஒன்றுதான், மனிதநேயம். நாங்கள் மனிதநேயத்துடன் வாழும் மக்கள் , எங்கள் முன் யார் நின்றாலும் அவரை நாங்கல் மனிதனாக தான் பார்ப்போம் . சாதியாக பார்க்க மாட்டோம். ஒரு முக்கியமான உயிராக தான் பார்ப்போம்
நாங்கள் எந்த ஒரு அடையாளமும் இல்லாத மக்களாக தான் வாழ ஆசைப்படுகிறோம். எங்களைப் பார்ப்பவர்கள் தான் சாதியாக அடையாளப் படுத்துகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் அண்ணனும் சாதியாக வாழவில்லை. மனிதனாக தான் அவர் வாழ்ந்திருக்கிறார். இங்குள்ள அனைத்து மக்களையும் அரவணைத்து நிற்கிற சக்தியாக இருந்த ஒருவரை இழந்துவிட்டோம் ” என்று சாய் தீனா பேசியுள்ளார்.
மேலும் படிக்க : Amstrong: ”வடசென்னையின் அரசன் வீழ்த்தப்பட்டார்” - பா.ரஞ்சித் படத்தின் இசையமைப்பாளர் உருக்கம்