ராயன்
தனுஷ் நடித்துள்ள ராயன் படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு நேற்று ஜூன் 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் தான் சினிமாவில் நடிக்க வந்தது தொடர்ந்து தற்போது அவர்மீது பரப்பப்படும் அவதூறுகள் என பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார். கருப்பாக ஒல்லியாக ஆங்கிலம் கூட தெரியாத தன்னை ஹாலிவுட் படம் வரை கொண்டு சென்றது ரசிகர்களின் கைதட்டல்கள் தான் என்று தனுஷ் பேசியது கவனமீர்த்து வருகிறது. இதே நிகழ்வில் ராயன் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் பற்றி தனுஷ் பேசியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராயனுக்கு ஓக்கே சொன்ன ரஹ்மான்
ஏ ஆர் ரஹ்மானிடம் என்னுடைய 50 ஆவது படத்தில் உங்கள் பெயர் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றேன். அவர் இரண்டு நாட்களில் சொல்வதாக சொன்னார். சொன்ன மாதிரி இரண்டு நாள் கழித்து ஃபோன் செய்தார். தான் இப்போது 30 படத்தில் வேலை செய்வதாகவும் இந்த படத்திற்கு யெஸ் சொல்வது ரொம்ப கடினம் என்று சொன்னார். 'ஆனால் நான் யெஸ் சொல்கிறேன் ' என்று ரஹ்மான் சொன்னார். அதற்காக அவருக்கு நன்றி
அத்தனை விருதுகள், பாராட்டுக்கள் எல்லாம் பார்த்தபின் கூட புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டே இருக்கிறார். எப்படி ஒருவரால் இவ்வளவு காலம் இப்படி இருக்க முடிகிறது என்று நான் ஆச்சரியப் பட்டேன்.
ரஹ்மான் இசையில் தனுஷ்
ராயன் படத்திற்கு முன்பாக தனுஷ் நடித்த மரியான், இந்தியில் வெளியான ராஞ்சனா, அத்ரங்கி ரே உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் ரஹ்மான். தற்போது ராயன் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. முன்னதாக வெளியான அடங்காத அசுரன் , வாட்டர் பாக்கெட் , பாடல்கள் ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ள நிலையில் தற்போது ஓ ராயா என்கிற பாடல் படத்தின் ஆல்பத்தில் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த பாடலாக மாறியுள்ளது.
மேலும் படிக்க : Dhanush About Selvaraghavan : என் அண்ணன் என்னை அவ்வளவு டார்ச்சர் செய்திருக்கிறார்.. தனுஷ் அதிரடி