நடிகர் விஜய் நடிக்கும் 68வது படத்தில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேற லெவலில் விஜய் படம்
பிகில் படத்தை தொடந்து நடிகர் விஜய்யின் 68 வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குவதன் மூலம் முதல்முறையாக இயக்குநர் வெங்கட்பிரபு விஜயுடன் கூட்டணி சேர்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். 3 விதமாக கேரக்டரில் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் முதலில் ஹீரோயினாக நடிக்க ஜோதிகாவிடம் கேட்கப்பட்டு, அவர் மறுத்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சொல்லப்படும் நிலையில், இன்னொரு ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் நடிப்பார் எனவும் இணையத்தில் தகவல் உலா வருகின்றது.
அதேபோல் முக்கிய கேரக்டரில் ஜெய், அவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைவார்கள் என கூறப்படுகிறது. எதுவுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், தற்போது விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கிருந்து வெங்கட் பிரபு தளபதி 68 தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
வயதை குறைக்கும் தொழில்நுட்பம்
இதனிடையே கலிபோர்னியாவில் உள்ள USC ICT எனும் ஒரு கல்லூரியில் 3டி முறையில் டீ-ஏஜிங் எனப்படும் வயதை குறைக்கும் தொழில்நுட்ப பணிகள் தளபதி 68 பணிக்காக நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரி அமெரிக்க ராணுவத்தின் நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் நிலையில் அவதார் , ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் ஆகிய படங்களில் பணிகள் இங்கு நடைபெற்று உள்ளது. அந்த நிறுவனம் தளபதி 68 மூலம் முதன்முறையாக இந்திய சினிமாவிற்குள் நுழைகிறது.
நடிகர் பிரசாந்த் நடிக்கிறாரா?
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா இருவரும் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தளபதி 68 படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.
ஏற்கனவே நடிகர் விஜய் நடிக்க வந்த புதிதில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் பிரசாந்த். மணிரத்னம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களில் படங்களில் நடித்திருந்த நிலையில் சில காலம் நடிப்பில் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் ‘அந்தகன்’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
அதேசமயம் நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் படிக்க: Actor Vijay: மைனஸ் 10 டிகிரி குளிரில் லியோ ஷூட்டிங்.. விஜய்யின் டெடிகேஷனை பார்த்து மிரண்ட நடிகர் நாசரின் தம்பி ஜவஹர்..!