நடிகர்கள் விஜய்யும்,  சூர்யாவும் முதல்முறையாக இணைந்து நடித்து ரசிகர்களால் கொண்டாடப்படும் நேருக்கு நேர் வெளியாகி இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. 


இயக்குநர் சிகரம் பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி கேளடி கண்மணி படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வசந்த்.அவரின் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியானது “நேருக்கு நேர்” படம். இந்த படத்தில் விஜய் ,சூர்யா , சிம்ரன் , கௌசல்யா , ரகுவரன் , சாந்தி கிருஷ்ணா , பேபி ஜெனிபர் , கரண் , விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்தார். 


படத்தின் கதை 


ஒரு ஹீரோவான விஜய்யின் அண்ணன் ரகுவரனும், மற்றொரு ஹீரோ சூர்யாவின் அக்கா சாந்தி கிருஷ்ணாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. இதனிடையே தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் பிரிகிறார்கள். இதை காரணம் காட்டி, தம்பிகள் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். இதற்கிடையில், அண்ணனின் பகை, அவர் குடும்பத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. இதனை ஹீரோக்கள் இருவரும் இணைந்து எப்படி முறியடித்து, தம்பதியை சேர்த்து வைக்கிறார்கள் என்பது தான் கதை.


அஜித் நடிக்கவிருந்த படம் 


ராஜாவின் பார்வையிலே படத்தில்  மட்டுமே விஜய் - அஜித் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். அதன்பிறகு நேருக்கு நேர் படத்தில் முதலில் சூர்யா கேரக்டரில் நடிக்கவிருந்தது அஜித் தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே அஜித் விலகினார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான சரவணனை சூர்யாவாக சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் வசந்த். ஏற்கனவே அஜித் நடித்த ஆசை படத்துக்கு சூர்யாவை நடிக்க வைக்கும் முயற்சியில் தோல்வியடைந்த வசந்த், இதில் வெற்றி பெற்றார். 






அதேசமயம் இந்த திரைப்படத்தில் தான் சிம்ரன் முதலில் நடித்தார். ஆனால், அதே ஆண்டில் விஜய் உடன் நடித்து வெளியான ஒன்ஸ்மோர் திரைப்படம் முதலில் வெளியானதால், அது சிம்ரனின் முதல்படமானது.  இதேபோல் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் அறிமுகமான கௌசல்யாவை பற்றி அறியாமல் ஒரு நகைக் கடையில் ஒட்டப்பட்டிருந்த கௌசல்யாவின் படத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்டு இப்படத்தில் ஒப்பந்தம் செய்தார்.


இசையில் மேஜிக் செய்த தேவா


மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த நேருக்கு நேர் படத்தில் இசையில் மேஜிக் செய்திருப்பார் தேவா. "அவள் வருவாளா", "மனம் விரும்புதே",  "அகிலா அகிலா" உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. இந்த படத்துக்குப் பின் விஜய்,சூர்யா இருவரும் ப்ரண்ட்ஸ் படத்தில் சேர்ந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Gokulashtami 2023: ”கோகுலத்து கண்ணா.. கண்ணா” .. மெய் சிலிர்க்க வைக்கும் கிருஷ்ணர் பற்றிய சினிமா பாடல்கள்..!