‘பேட்ட’ படத்தில் நடித்ததற்கு சம்பளம் வாங்கியதால் தான் குற்றவுணர்ச்சிக்கு உள்ளானதாக பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் கூறியுள்ளார்.


 நவாசுதீன் சித்திக்


கேங்ஸ் ஆஃப் வாஸெப்பூர் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றவர் நடிகர் நவாசுதீன் சித்திக். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தார். தொடர்ச்சியாக மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருபவர் நவாசுதீன் சித்திக். இவர் நடித்த ஹட்டி படம் கடந்த ஆண்டு ஜிஃபைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. பாலிவுட் இயக்குநர் அக்‌ஷத் அஜய் ஷர்மா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் நவாசுதீன் சித்திக். 


 தெலுங்கில் அவர் நடித்த படம் சைந்தவ் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது. வெங்கடேஷ் நடித்துள்ள இந்தப் படத்தை சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். ஆர்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, பேபி சாரா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளின்போது ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் வில்லனான நடித்தது குறித்து அவர் பேசியுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


குற்றவுணர்ச்சியாக இருந்தது!


2019ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், த்ரிஷா, மாளவிகா மோகனன், சசிகுமார், நரேன், பாபி தியோல், மேகா ஆகாஷ், த்ரிஷா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். நவாசுதீன் சித்திக் இப்படத்தில் சிங்காரம் என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்தார்.


இந்தப் படத்தில் நடித்தது குறித்து பேசிய அவர் “நான் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்ததற்குப் பின் மிகுந்த குற்றவுணர்ச்சிக்கு உள்ளானேன். ஏனென்றால் அந்தப் படத்தில் நான் என்ன செய்கிறேன் என்பதைக் கூட தெரியாமல்  நடித்தேன். அதற்காக சம்பளம் வாங்கியபோது எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சி ஏற்பட்டது.  எல்லாரையும் முட்டாளாக்கி விட்டது போல் நான் உணர்ந்தேன். நான் பேசிய வசனங்கள் எதுவுமே புரியாமல் வெறுமனே உதட்டை அசைத்துக் கொண்டிருந்தேன். அதை ரசிகர்கள் பாராட்டியபோது அது அந்த குற்றவுணர்ச்சி இன்னும் அதிகரித்தது. நான் அந்தப் படத்தில் நடித்ததற்கு பணம் வாங்கியபோது நான் மிகவும் பலவீனமானவனாக இருந்தேன். அங்கு நடந்த எதுவும் எனக்குப் புரியவில்லை. 


அதனால் தான் இந்த முறை சைந்தவ் படத்திற்கு நானே டப்பிங் செய்தேன். நான் பேசிய ஒவ்வொரு வசனத்திற்கும் அர்த்தம் தெரிந்துகொண்டேன்“ என்று அவர் கூறியுள்ளார்.




மேலும் படிக்க : Siren Review: தமிழ் சினிமா தொடாத கதை.. ஜெயம் ரவியின் “சைரன்” படத்தின் முழு விமர்சனம் இதோ..!


Samantha : எங்களுக்கு ஒன்னும் அட்வைஸ் பண்ண தேவையில்ல... சீண்டிய நெட்டிசனுக்கு தக்க பதிலடி தந்த சமந்தா..