டிஎன்பிஎஸ்சி அமைப்பின் புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், ஐஆர்எஸ் அதிகாரி சரவண குமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார், முனைவர் பிரேம் குமார் ஆகிய 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்து 6 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


 அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்படுவது எப்படி?


டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசுத் துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இதற்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி, தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்யும்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இதில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக, நிரப்பப்படாமல் உள்ளது. அதேபோல டிஎன்பிஎஸ்சியில் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.


உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் ஐஏஎஸ் (ஓய்வு), பொறுப்பு தலைவராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆக இருந்தது. குறிப்பாக ஜோதி சிவஞானம், அருள்மதி, ஆரோக்கிய ராஜ் ஆகிய 3 பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.


6 ஆண்டுகளுக்கு பதவி


இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், ஐஆர்எஸ் அதிகாரி சரவண குமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார், முனைவர் பிரேம் குமார் ஆகிய 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் நியமிக்கப்பட்டதில் இருந்து 6 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.




டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் எப்போது?


இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 


டிஎன்பிஎஸ்சி தலைவர், போதிய உறுப்பினர்கள் இதுவரை நியமிக்கப்படாததால், ஆணையத்தின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. குரூப் 4 தேர்வு அறிவிப்பு, குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் ஆகியவை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வெளியானது நினைவுகூரத் தக்கது. 


இதற்கிடையே 'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்வான இளைஞர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார். தொடர்ந்து ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரங்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சிக்கு புதிதாக 5 உறுபினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.